அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சிங் பணியாளர்களின் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி


அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சிங் பணியாளர்களின் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 20 April 2018 10:45 PM GMT (Updated: 20 April 2018 9:00 PM GMT)

அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சிங் பணியாளர்களின் பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் பங்கு மகத்தானது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க முடியாத நிலையில் உள்ள ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் என பல்வேறு தரப்பினரும் நாடுவது அரசு ஆஸ்பத்திரியையே. இங்கு திறமையான டாக்டர்கள் உள்ளனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் பயிற்சி டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது ஆஸ்பத்திரி வளாகங்களை சுத்தமாக பராமரித்தல் மற்றும் பார்வையாளர்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நோயாளிகள் மட்டும் அல்லாது அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக தினமும் வந்து செல்கின்றனர்.

விபத்தின்போது பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்கள், லேசான காயம் அடைந்தவர்கள் பெரும்பாலானோர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். இதனால் மாவட்ட மற்றும் தாலுகா தலைநகரங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் எப்போதும் சிகிச்சைக்காக வருபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சிங் பணியாளர்களின் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்காக வருபவர்களும், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் போதிய டாக்டர்களும், நர்சிங் பணியாளர்களும் அரசு ஆஸ்பத்திரிகளில் இருப்பதில்லை.

அந்த நேரங்களில் அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிகிச்சையளிக்க அப்போது பணியில் இருக்கும் நர்சிங் பணியாளர்களுடன் அங்கு சிகிச்சை பெறுபவர்களுடன் தங்கியிருப்பவர்களும் உதவி செய்ய வேண்டிய நிலையே பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அதிக செலவு செய்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் பெரும்பாலான குடும்பத்தினர் சிரமப்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் சிறந்த அறுவை சிகிச்சைகள், தரமான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டாலும் நோயாளிகளை தொடர்ந்து கனிவுடன் கண்காணிப்பதில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுபவர்கள் மெத்தனப்போக்கையையே கடைபிடிக்கின்றனர்.

அது மட்டுமல்லாது நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் நோயின் தன்மை குறித்தும், சிகிச்சை தொடர்பாகவும் கேட்கும் சந்தேகங்களுக்கு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சரியான பதில் அளிக்காமல், அலட்சியத் துடன் நடந்து கொள்வதாக ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் உச்சக்கட்ட ஆபத்து என்னவென்றால், அரசு ஆஸ்பத்திரிகளில் பயிற்சி நர்சிங் மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் சில நேரங் களில் செயற்கை சுவாசத்தில் உயிருக்கு போராடும் நோயாளிகள் உயிர் இழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்தால் தரமாக சிகிச்சை, அன்பான கவனிப்பு என்ற எண்ணம் வசதி படைத்தோர், ஏழை-எளியோர் என அனைத்து தரப்பினர் மனதிலும் ஏற்படும் வண்ணம் அதன் சேவை இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story