சாலையை சீரமைக்காவிட்டால் மறியல் நடத்தப்படும் முத்தரசன் பேச்சு
கொத்தமங்கலத்தில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கா விட்டால் மறியல் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தியாகிகள் நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன், ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆலங்குடியில் இருந்து கொத்தமங்கலம் வருவதற்கு 20 நிமிடங்கள் போதும். ஆனால் ஒரு மணி நேரம் ஆனது. கொத்தமங்கலத்தில் ஒரு இடத்தில் உள்ள சாலையில் மரண குழிகள் இருந்ததால், காரில் வருவது சிரமமாக இருந்தது. இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் எனது தலைமையில் சாலை மறியல் நடத்துவோம்.
தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் எச்.ராஜாவின் பேச்சுகளுக்கு அவரை கைது செய்திருப்பார்கள். ஏன் தமிழக அரசு பதுங்கி இருக்கிறது என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த நடை பயணத்தில் மக்கள் ஆதரவு நன்றாக இருந்தது. அதே ஆதரவு மனித சங்கிலி போராட்டத்திலும் இருக்கும் என்று நம்புகிறோம். பேராசிரியை நிர்மலாதேவி பிரச்சினையில் கவர்னர் ஏன் முந்திக் கொண்டு செல்கிறார் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அரசியல் வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் துணை போகிறது. அதனால் மக்கள் நலப்பணிகள் நடக்கவில்லை.
கூட்டத்தில் முத்தரசன் பேசி கொண்டிருந்தபோது, அருகில் போலீஸ்காரர் ஒருவர் செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனால் முத்தரசனால் தொடர்ந்து பேச முடியவில்லை. இதனால் அந்த போலீஸ்காரை அந்த இடத்தில் இருந்து தள்ளிபோக சொன்னார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story