போட்டி பேரணியில் ஈடுபட முயன்ற காங்கிரசார் மீது போலீஸ் தடியடி


போட்டி பேரணியில் ஈடுபட முயன்ற காங்கிரசார் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 20 April 2018 11:40 PM GMT (Updated: 20 April 2018 11:40 PM GMT)

மைசூருவில், ஜனதா தளம்(எஸ்) கட்சியினரை எதிர்த்து போட்டி பேரணியில் ஈடுபட முயன்ற காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மைசூருவில் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு,

கர்நாடகத்தில் அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நட்சத்திர வேட்பாளர்களான பா.ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா, ஈசுவரப்பா, காங்கிரசைச் சேர்ந்த மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ஏ.மஞ்சு உள்பட பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதுமட்டுமல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்-மந்திரியும், சாமுண்டீஸ்வரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான சித்தராமையா நேற்று மைசூரு மாவட்டம் நஜர்பாத்தில் உள்ள மினி விதான சவுதாவில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தார். மேலும் அவர் மைசூரு அரண்மனை அருகே கோட்டை ஆஞ்சநேயர் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களும், சித்தராமையாவின் ஆதரவாளர்களும் மைசூரு அரண்மனை அருகே உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகம் முன்பு திரண்டிருந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையாவை எதிர்த்து ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் களம் இறங்கும் ஜி.டி.தேவேகவுடாவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டார். அவரும் மைசூரு அரண்மனை அருகே உள்ள டவுன் ஹால் முன்பு இருந்து ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

இதனால் அவருடைய ஆதரவாளர்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தொண்டர்களும் மைசூரு அரண்மனை அருகே உள்ள டவுன் ஹால் முன்பு குவிந்தனர். இதில் ஒருதரப்பினர் மைசூரு சர்க்கிள் மற்றும் கோட்டை ஆஞ்சநேயர் பகுதி, சாமராஜ உடையார் சர்க்கிள் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டனர்.

அதைப்பார்த்த காங்கிரசார், ஜனதா தளம்(எஸ்) கட்சியினரை எதிர்த்து தாங்களும் பேரணியில் ஈடுபட முயன்றனர். இருதரப்பினரும் ஒருவரையொருவர் வார்த்தைகளால் கடுமையாக தாக்கி பேசிக்கொண்டனர். மேலும் கோஷங்களும் எழுப்பினர். இதனால் அங்கு இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

காங்கிரசார் போட்டி பேரணியில் ஈடுபட முயல்வதையும், வார்த்தைப் போரில் ஈடுபடுவதையும் பார்த்த போலீசார் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும் என்று கருதி காங்கிரசாரை தடுத்தனர். இதனால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து தாங்கள் பேரணியில் ஈடுபடுவோம் என்று காங்கிரசார் போலீசாரிடம் கூறினர்.

மேலும் அவர்கள் தடையை மீறி பேரணியில் ஈடுபட முயன்றனர். இதன்காரணமாக போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார், காங்கிரசார் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து காங்கிரசார் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.

காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்து அறிந்த மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் விஷ்ணுவர்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் காங்கிரசாரை சமாதானப்படுத்தினார். மேலும் தடியடி நடத்திய போலீசாரை, கமிஷனர் விஷ்ணுவர்தன் கடிந்து கொண்டார்.

பின்னர் பேரணி மேற்கொள்ள காங்கிரசாருக்கு கமிஷனர் விஷ்ணுவர்தன் அனுமதி வழங்கினார். அதையடுத்து காங்கிரசார் பேரணியாக சென்றனர். காங்கிரசாரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும் போட்டி பேரணியில் ஈடுபட்டதால் மைசூருவில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story