வள்ளியூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.7½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வள்ளியூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.7½ லட்சம் கொள்ளை  மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 April 2018 8:30 PM GMT (Updated: 21 April 2018 1:05 PM GMT)

வள்ளியூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.7½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏர்வாடி, 

வள்ளியூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.7½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

டாஸ்மாக் மேற்பார்வையாளர் 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சமாதானபுரத்தை சேர்ந்தவர் கனகவேல் (வயது 44). இவர் வள்ளியூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக உள்ளார். இவர் தினமும் காலையில் கடைக்கு சென்று விட்டு, அன்று வசூலாகும் பணத்தை எடுத்து இரவில் வீட்டிற்கு வருவது வழக்கம்.

இதன்படி வழக்கம் போல் கனகவேல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

கத்தியை காட்டி கொள்ளை 

வள்ளியூர் அருகே வந்தபோது, அந்த பகுதியில் 2 மர்ம நபர்கள் மறைந்து இருந்தனர். அவர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தி, அரிவாளை காட்டி கனகவேலுவை மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கனகவேல் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

இதுகுறித்து உடனடியாக ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சார்லஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி ரூ.7½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story