நெல்லை அருகே கோவிலில் 5 சாமி சிலைகள் கொள்ளை
நெல்லை அருகே கோவிலில் 5 சாமி சிலைகளை கொள்ளையடித்துச்சென்ற முகமூடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது அழகர் கோவில். பழமையான இந்த கோவிலில் அழகரும், உற்சவராக சுந்தரராஜபெருமாளும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோபூஜை நடைபெறும். கோவில் அர்ச்சகராக கண்ணன்என்பவர்உள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் கண்ணன் பூஜையை முடித்துவிட்டு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் கோவிலின் பக்கவாட்டு மதில் சுவர்மேல் ஏறி உள்ளே குதித்தனர். அவர்களில் ஒருவன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தான். இந்த காட்சி மற்றொரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் கோவில் உள்பிரகார கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர். பின்னர் கருவறையின் முன்பு இருக்கும் மண்டபத்தில் இருந்த 1½ அடி உயரம் கொண்ட சுந்தரராஜபெருமாள், லட்சுமிதேவி, பூதேவி ஆகிய உற்சவர் சிலைகள், பித்தளையால் ஆன சவுபாக்கியலட்சுமி, ஆண்டாள் சிலைகள் ஆகிய 5 சாமி சிலைகளை கொள்ளையடித்தனர்.
மேலும் அங்கு இருந்த பழமையான அகஸ்தியர் காலத்தில் பயன்படுத்திய சங்கு, உண்டியல் ஆகியவற்றையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
நேற்று காலையில் அர்ச்சகர் கண்ணன் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் உள்பிரகார கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு கோவில் நிர்வாக அதிகாரி மகேந்திரனுக்கு தகவல் கொடுத்தார். இதுபற்றி அவர் சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர்.
சிலைகளை கொள்ளையடித்துச்சென்ற முகமூடி கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ஏற்கனவே கடந்த 1980-ம் ஆண்டு ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story