நீதிமன்ற உத்தரவுப்படி பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமிப்பு பகுதியை கலெக்டர் ஆய்வு


நீதிமன்ற உத்தரவுப்படி பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமிப்பு பகுதியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 April 2018 3:45 AM IST (Updated: 22 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்ற உத்தரவுப்படி பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமிப்பு பகுதியை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

பெருந்துறை, 

கதிரம்பட்டி ஊராட்சி ஓடை புறம்போக்கில் ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், இதனால் மழை காலங்களிலும், வெள்ள அபாய காலங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை மேற்கோள் காட்டி இனி தமிழகம் முழுவதிலும் நீர் நிலை ஓடைகளில் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் எனவும், அதன் விபரத்தை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 150 வீடுகள் கடந்த அக்டோபர் 2016-ல் இடித்து தள்ளப்பட்டது. ஆனால் இந்த வீடுகளுக்கு செல்லும் நடைபாதையை தற்போது தார்சாலையாக மாற்ற ரியல் எஸ்டேட் அதிபர்கள் முயற்சிப்பதாகவும், அதற்காக பொதுப்பணித்துறை வசம் இருந்த இந்த நடைபாதையை அவசர அவசரமாக நெடுஞ்சாலை துறைக்கு மாற்றி ஊராட்சி மூலம் சாலை மேம்பாடு என கூறி 40 லட்ச ரூபாய் செலவில் தார்சாலை அமைப்பதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக மீண்டும் சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

அதன்படி ஈரோடு கலெக்டர் பிரபாகர் மற்றும் நிலஅளவை துறை, பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரம் நடந்தது. அதன்பின்னர் புகார்தாரரின் வக்கீலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் தங்களுக்கு தார்சாலை அமைத்து தரவேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Next Story