அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி பிரசாரம்
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்கக்கோரி ஈரோடு வீதிகளில் பிரசாரம் நடைபெற்றது.
ஈரோடு,
தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலணி முதல் கணினி வரை 13 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை ஆகியவை வழங்கப்படுகிறது. அத்துடன், கல்வியில் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வருகிற கல்வி ஆண்டு முதல், பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளையும் மேம்படுத்த தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தநிலையில் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரிய-ஆசிரியைகளும் தங்கள் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த 2017-2018 கல்வி ஆண்டு நேற்று முன்தினம் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. வழக்கமாக கோடை விடுமுறை விடப்பட்டதும் பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகளும் விடுமுறை எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூட ஆசிரிய -ஆசிரியைகள் மாணவர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன்படி ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் ஆசிரியைகள் நேற்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அசோகபுரம், அண்ணாநகர், ஸ்டோனி பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று அனைத்து வீடுகளிலும் 5 வயது நிறைவடைந்த சிறுவர்-சிறுமிகளை கட்டாயம் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வலியுறுத்தியதுடன், அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்கவும் கேட்டுக்கொண்டனர். மேலும், அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அரசு வழங்கி வரும் சலுகைகள், உதவித்தொகைகள், இலவச பொருட்கள் குறித்து துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள். தங்கள் பள்ளிக்கூடத்தில் உள்ள வசதிகளையும் மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் எடுத்துக்கூறினார்கள். இதில் ஆசிரியைகள் லதா, மல்லிகா, உமா மகேஸ்வரி, பிரின்சஸ், கவிதா ஆகியோர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.
இதுபற்றி தலைமை ஆசிரியை கே.சுமதி கூறும்போது, ‘எங்கள் பள்ளிக்கூடத்தில் டிஜிட்டல் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாநகராட்சியின் மூலம் ஸ்மார்ட் வகுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கணினி வகுப்புக்கு என்று தனியாக ஆசிரியை நியமித்து இருக்கிறோம். பல்வேறு கலை பயிற்சிகள் அளித்து வருகிறோம். பள்ளிக்கூட அளவில் அரசு அறிவிக்கும் அனைத்து போட்டிகளுக்கும் மாணவர்களை அனுப்பி, அவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வருகிறோம். அறிவியல் கண்காட்சிகள், பயிற்சிகளிலும் கலந்துகொள்ள செய்கிறோம். இதுதவிர அரசின் அனைத்து திட்டங்களும், உதவித்தொகைகளும் சரியாக பெற்றுக்கொடுத்து வருகிறோம். இதை பெற்றோரிடம் எடுத்துக்கூறி அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி உள்ளோம்’ என்றார்.
இதுபோல் ஈரோடு மாநகராட்சியின் பல பகுதிகளிலும் அந்தந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்களை சேர்க்க தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story