திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் 661 பள்ளி வாகனங்கள் ஆய்வு


திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் 661 பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 21 April 2018 9:30 PM GMT (Updated: 21 April 2018 8:06 PM GMT)

திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் 661 பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் வாகன ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருப்பூர்,

தமிழ்நாடு மோட்டார் வாகனம் சிறப்பு பள்ளி பேருந்து வாகன சட்டம் விதிகள் 2012-ன்படி ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள 140 தனியார் பள்ளிகளை சேர்ந்த 661 வாகனங்கள் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரஜினிகாந்த் (திருப்பூர் வடக்கு), முருகானந்தம் (தெற்கு), வாகன ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சித்ரா, பாஸ்கரன், கோகுலகிருஷ்ணன், கனகராஜ் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களின் படிக்கட்டுகள், இருக்கைகள், கதவுகள், தரைதளம் ஆகியவற்றின் உறுதி தன்மை, அவசரகால வழி, முதலுதவிபெட்டி, தீயணைப்பு கருவி, பக்கவாட்டு கண்ணாடிகள், ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கலந்து கொண்டு ஒரு சில வாகனங்களை ஆய்வு செய்தார். பின்னர் வாகன ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் அவர் பேசும் போது, மிகுந்த பொறுப்புடனும், பாதுகாப்பான முறையிலும் வாகனங்களை ஓட்ட வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விபத்துகள் ஏற்படாதவாறு வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்றார்.

முன்னதாக பள்ளி வாகனங்களை விபத்து இல்லாமல் ஓட்டுவது என்று கலெக்டர் தலைமையில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி முருகன், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜ்கண்ணா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முருகானந்தம், ரஜினிகாந்த் ஆகியோர் கூறியதாவது:-

திருப்பூர் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் அவினாசி வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றுக்குட்பட்ட பகுதிகளில் 140 பள்ளிகளை சேர்ந்த 826 வாகனங்கள் உள்ளன. இவற்றில் 661 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஆய்வில் 500 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதலுதவி பேட்டியில் மருந்துகள் இல்லாதது, பக்கவாட்டு கண்ணாடி சரியில்லாதது, டயர் தேய்மானம் அடைந்துள்ளது போன்ற சிறுசிறு குறைபாடுகள் இருந்த 161 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. வாகனங்களில் உள்ள குறைகளை சரிசெய்து, வேலை நாட்களில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வுக்கு கொண்டுவரப்படாத வாகனங்கள் ஒர்க்‌ஷாப்பில் இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளனர். எனவே அடுத்த மாதம் (மே) 31-ந்தேதிக்குள் அனைத்து வாகனங்களும் தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story