கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 22 April 2018 4:30 AM IST (Updated: 22 April 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

தந்தை, மகனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி கோத்தகிரி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள அஜ்ஜீர் கிராமத்தை சேர்ந்தவர் ஹாலன் (எ) பெள்ளி (வயது 64), விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பசுவராஜ் என்பவருக்கும் இடையே தங்கள் வீட்டுக்கு அருகே விறகு அடுக்கி வைப்பது தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்த பிரச்சினை குறித்து ஊர் பெரியவர்கள் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி பசுவராஜ், அவரது மகன்கள் அண்ணாதுரை, ஜெயராஜ் ஆகியோர் சேர்ந்து பெள்ளியின் வீடு அருகே அடுக்கி வைத்து இருந்த விறகுகளை அப்புறப்படுத்தி உள்ளனர். இதுபற்றி பெள்ளி, அவரது மகன் சண்முகம் (29) ஆகியோர் பசுவராஜிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பசுவராஜ், அவரது மகன்கள் அண்ணாதுரை, ஜெயராஜ் ஆகியோர் உருட்டு கட்டைகளால் பெள்ளி, சண்முகம் ஆகியோரை தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பெள்ளி, சண்முகம் ஆகியோரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் பெள்ளி ஊட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பெள்ளி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தந்தை, மகனை தாக்கி 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு மேல் ஆகியும் பசுவராஜ், அண்ணாதுரை, ஜெயராஜ் ஆகியோர் கைது செய்யப்படவில்லை.

இதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெள்ளி, சண்முகத்துக்கு ஆதரவாக ஊர் தலைவர் சங்கர் தலைமையில் அஜ்ஜீர் கிராம மக்கள் சுமார் 30 பேர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை நேற்று மதியம் முற்றுகையிட்டனர். அவர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கைது செய்து விடுவோம், என்றனர்.

இது குறித்து அஜ்ஜீர் கிராம மக்கள் கூறும்போது, போலீசார் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்துக்கு வந்தோம். தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் ஊர் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம், என்றனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story