கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கனவு பலிக்காது


கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கனவு பலிக்காது
x
தினத்தந்தி 22 April 2018 4:25 AM IST (Updated: 22 April 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெறுவதையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், முதல்-மந்திரி சித்தராமையாவின் பிரசாரத்திற்காக ‘முதல்-மந்திரி பேசுகிறேன்‘ என்ற பெயரிலான செல்போன் செயலியை வெளியிடும் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி சித்தராமையா, புதிய செல்போன் செயலியை வெளியிட்டு பேசியதாவது:-

எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ளது. மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் 5 ஆண்டுகால சாதனைகளுக்காகவும், மக்களின் நலனில் அக்கறை செலுத்தியதாலும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.

மக்கள் செல்வாக்குடன் கர்நாடகத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி. அதனை யாராலும் தடுக்க முடியாது. பா.ஜனதாவினர் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். தொங்கு சட்டசபை வந்தால், அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கனவில் உள்ளனர். கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது. அவர்களால் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது.

ஜனதாதளம்(எஸ்) கட்சியை பொறுத்த வரையில் தென்மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குடன் உள்ளது. மாநிலம் முழுவதும் அந்த கட்சி இல்லை. சட்டசபை தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, எடியூரப்பாவுக்கு பொய் சொல்வதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. பொய் சொல்லியே ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். பா.ஜனதா ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி, அந்த கட்சி தலைவர்களால் பிரசாரம் செய்ய முடியவில்லை. அதனால் காங்கிரசுக்கு எதிராக பா.ஜனதாவினர் பொய் பிரசாரங்கள் செய்கின்றனர்.

பா.ஜனதா தலைவர்கள் சொல்லும் பொய்யை மக்கள் நம்ப மாட்டார்கள். கர்நாடக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் விரும்பிய ஆட்சியை காங்கிரஸ் கொடுத்துள்ளது. ஜனநாயகத்தில் மக்களே முதலாளிகள். அரசின் சாதனைகளை கருத்தில் கொண்டு காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.


Next Story