தி.மு.க., கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்


தி.மு.க., கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2018 4:15 AM IST (Updated: 24 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று நாமக்கல், திருச்செங்கோட்டில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

நாமக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல்லில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் மணிமாறன் வரவேற்று பேசினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ/க்கள் கே.பி.ராமசுவாமி, பொன்னுசாமி, சம்பத்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பாலு, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன்தாஸ், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜி.ஆர்.சுப்பிரமணியன், டாக்டர் செழியன், பொதுக்குழு உறுப்பினர் குமரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இவர்கள் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பஸ்நிலையம், மணிக்கூண்டு வழியாக நேதாஜி சிலை வரை கைகோர்த்து நின்றபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செங்கோட்டில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தின. திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் இருந்து தொடங்கி சின்ன ஓம்காளியம்மன் கோவில் வரை நடந்த இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் பரமத்தி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி, மாவட்ட துணை செயலாளர் சேகர், பொருளாளர் குமார், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் டி.எஸ்.டி. பொன்னுசாமி, நகர தலைவர் சர்வேயர் செல்வகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.என்.குருசாமி, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மணிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அசோகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் நதிராஜவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மனிதசங்கிலி நடைபெற்றது. 

Next Story