மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், வைகோ தலைமையில் மனித சங்கிலி போராட்டம்


மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், வைகோ தலைமையில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 23 April 2018 11:00 PM GMT (Updated: 23 April 2018 9:10 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசை கண்டித்து தஞ்சையில் வைகோ தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள்-முன்னாள் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வற்புறுத்தாத மாநில அரசை கண்டித்தும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தஞ்சை பள்ளியக்கிரஹாரம் முதல் தொம்பன்குடிசை வரை நேற்று மாலை மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், மாநில வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், அன்பழகன், கோவி.செழியன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், ராஜேந்திரன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் வக்கீல் அன்பரசன், திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் அமர்சிங், ம.தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் உதயகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹமீது, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பாண்டியன், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தக சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மனித சங்கிலி போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பெற்று வந்த உரிமையை அழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டினால் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. கர்நாடகத்தில் 11 லட்சம் ஏக்கராக இருந்த பாசன பரப்பு 19 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 30 ஆயிரம் ஏரி, குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. தமிழக அரசு சுயமரியாதை, தன்மானத்தை இழந்து மத்திய அரசின் காலில் விழுந்து கிடக்கிறது. தமிழக மக்கள் மனம் கொதி நிலையில் உள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள் இயங்காத நிலை ஏற்பட்டால் தான் மத்திய அரசுக்கு அச்சம் வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசை கண்டித்து நடைபெறும் மனிதசங்கிலி போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இது மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை தான். காவிரி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்ச்சி நீர்பூத்த நெருப்பாக அனைவருடைய மனதிலும் உள்ளது. இது எரிமலையாக வெடிக்க வேண்டும். மக்களை போராட்டத்திற்கு தயார்படுத்தும் களம் தான் இந்த மனித சங்கிலி போராட்டம். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பதால் இந்திய ஒருமைப்பாடு தேவையா? என்று கேள்வி எழுந்துள்ளது. அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாவோம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story