வாழப்பாடியில் கருக்கலைப்பால் கர்ப்பிணி இறந்த விவகாரம்: தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் கைது


வாழப்பாடியில் கருக்கலைப்பால் கர்ப்பிணி இறந்த விவகாரம்: தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் கைது
x
தினத்தந்தி 24 April 2018 4:47 AM IST (Updated: 24 April 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில் கருக்கலைப்பால் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

வாழப்பாடி, 

சேலம் கன்னங்குறிச்சி, வேடுகாத்தாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 24 வயதுடைய கர்ப்பிணி அங்கு பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் மேலும் பரிசோதனைக்காக கடந்த வாரம் வாழப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த டாக்டர் செல்வாம்பாளிடம், கர்ப்பிணி தனது கணவர் மற்றும் மாமியாருடன் வந்து தன் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் மூலம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

வயிற்றில் பெண் குழந்தை இருப்பது தெரிந்ததால், அங்கேயே அந்த பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதனால் கர்ப்பிணிக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆஸ்பத்திரியிலேயே பெண்ணுக்கு கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது. பின்னர் உடல் நிலை மோசமானதால், வேறு தனியார் ஆஸ்பத்திரிக்கு அந்த கர்ப்பிணி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பெண் டாக்டர் கைது

இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி தலைமையில், டாக்டர் ராதிகா, வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரி முதுநிலை குடிமை மருத்துவ அலுவலர் மற்றும் இயக்குனரக அலுவலக கண்காணிப்பாளர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் கொண்ட குழுவினரால் டாக்டர் செல்வாம்பாள் கைது செய்யப் பட்டார்.

மேலும் கலெக்டரின் உத்தரவின் பேரில் அந்த தனியார் ஆஸ்பத்திரி உடனடியாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்துள்ளது. பெண் சிசு, பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கடும் நடவடிக்கை

மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக, கருக்கலைப்பு செய்ய நினைக்கும் கர்ப்பிணிகள் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும். அங்கு பாதுகாப்பாக இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படும். அவர்களது ரகசியம் காக்கப்படும். கண்டிப்பாக ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் நிலையத்தில் கண்டறிய கூடாது. இதையும் மீறினால் அவர்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story