பரிணாமத் தொடர்ச்சியில் அடுத்து வரும் உயிரினம் எது?


பரிணாமத் தொடர்ச்சியில் அடுத்து வரும் உயிரினம் எது?
x
தினத்தந்தி 24 April 2018 1:17 PM IST (Updated: 24 April 2018 1:17 PM IST)
t-max-icont-min-icon

குரங்கில் இருந்து மனிதன் வந்தான். பரிணாமத் தொடர்ச்சியில் அடுத்ததாக, மனிதனில் இருந்து என்ன உயிரினம் வரப்போகிறது என்பது நீண்ட நெடும் காலமாக விடையில்லாமல் தொடரும் மில்லியன் டாலர் கேள்வி.

முக்கியமாக, அப்படி ஒரு புதிய உயிரினம் உருவாக சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதும் பன்னெடுங்காலமாக விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது.

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ எனும் கூற்றுக்கு மனித பரிணாமமும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்துள்ளது ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய வெகுசன மரபியல் ஆய்வு ஒன்று.

அதாவது, பரிணாம வளர்ச்சி அல்லது மாற்றம் என்பது ஒருநாளும் நிற்பதில்லை என்பதற்கு, மனிதர்களின் உடலில் உள்ள மரபுத்தொகையில் (Human genome) தொடர்ச்சியாக நிகழும் பரிணாம மாற்றங்களே சாட்சி என்று அறிவியல் ஆதாரங்களை முன்வைக்கிறது இந்த ஆஸ்திரேலிய நாட்டு ஆய்வு.

பரிணாமம் தொடர்பான இந்த மரபியல் மாற்றங்கள் காரணமாக மனிதர்களின் இனப்பெருக்கத் திறன் மற்றும் இருதய செயல்பாடு ஆகியவை மாறுகின்றன என்று இந்த புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பரிணாம மாற்றத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்றான இயற்கைத் தேர்வு (Natural selection) என்பது பல சந்ததிகள் வரை தொடரக்கூடிய, மிக மிக மெதுவாக உருவாகும் மாற்றங்கள் கொண்ட ஒரு நிகழ்வாகும். துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய மாற்றங்களை இனம் காண்பது அல்லது கண்காணிப்பது சாத்தியமில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஆனால், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் மரபியலாளர்கள் ஜியான்யாங் மற்றும் ஜியான் செங் ஆகிய இருவரும், டி.என்.ஏவில் ஏற்படக்கூடிய ‘மியூட்டேஷன்’ (Mutation) எனப்படும் மரபியல் பரிணாம மாற்றங்களை கண்டறியும் ஒரு புள்ளிவிவர ஆய்வுமுறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் உதவியுடன், இங்கிலாந்தின் பயோபேங்க்கில் உள்ள சுமார் 1,26,545 மனிதர்களின் மரபியல் தகவல்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், குதிகால் எலும்பின் கனிம அடர்த்தி (heel bone mineral density), ஆண் வழுக்கை (male pattern baldness), உடல் நிறைச் சுட்டெண் (BMI), பெண்களின் முதல் மற்றும் கடைசி மாதவிடாய் ஏற்படும் வயது, மற்றும் முதல் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் வயது உள்ளிட்ட, மனிதர்களின் சுமார் 28 குணாதிசயங்கள் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

மேலே குறிப்பிட்ட குணாதிசயங்களுக்குக் காரணமான மரபணுக்களின் செயல்பாடுகளை ஒவ்வொரு மனிதனின் வெவ்வேறு வயதுகளில் ஆய்வு செய்தால் வெவ்வேறு சந்ததிகளுக்கு இடையிலான வித்தியாசங்களைக் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, இயற்கைத் தேர்வு அல்லது தக்கது நிற்கும் (natural selection, or ‘survival of the fittest') எனும் பரிணாமக் கோட்பாட்டின்படி ஒரு உயிரினத்தின் நிலைப்புத்திறனை மேம்படுத்தும் குணாதிசயங்கள் அதன் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும். அதுபோலவே, உயிரினங்களின் உடல் ஆரோக்கியத்தைக் குலைக்கும் மரபணு மாற்றங்கள் எதிர்மறைத் தேர்வு (negative selection) எனும் இயற்கை விதியின்படி அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனிதர்களின் இருதய செயல்பாடு மற்றும் இனப்பெருக்கத் திறன் ஆகிய குணாதிசயங்கள் பரிணாமத்தின் எதிர்மறைத் தேர்வுக்கு உள்ளாகியிருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உதாரணமாக, இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பின் அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை எதிர்மறைத் தேர்வு பரிணாம மாற்றத்துக்கு உள்ளாகியிருப்பதைக் கூறலாம். அடுத்ததாக, இனப்பெருக்கத் திறனுடன் தொடர்புடைய பெண்களின் மாதவிடாய் முற்றிலுமாக நின்றுபோகும் வயதும் எதிர்மறைத் தேர்வுக்கு உள்ளாகியிருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில், சந்ததி விட்டு சந்ததி செல்லும் மரபணு மாற்றங்கள் மற்றும் சில சந்ததிகளில் நீக்கப்படும் மரபணு மாற்றங்கள் ஆகிய இருவகையான பரிணாம மாற்றங்கள் மனிதர்களின் உடலில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன என்பதை இந்த ஆய்வு தகுந்த அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.

Next Story