வாய்ப்புகள் நிறைந்த அழகுக்கலை டிப்ளமோ படிப்புகள் !


வாய்ப்புகள் நிறைந்த அழகுக்கலை டிப்ளமோ படிப்புகள் !
x
தினத்தந்தி 24 April 2018 9:18 AM GMT (Updated: 24 April 2018 9:18 AM GMT)

சில நேரங்களில் பட்டப்படிப்புகளைவிட எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக இருக்கின்றன டிப்ளமோ படிப்புகள்.

குறிப்பாக அழகுக்கலை உள்ளிட்ட சில குறிப்பிட்ட டிப்ளமோ படிப்புகள் வேலைவாய்ப்புடன், சுயதொழில் வாய்ப்புகளையும் கொண்டுள்ளன. அப்படி பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்ட அழகுக்கலை படிப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்...

ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவரும் தொழில்களில் அழகுக்கலைக்கு முதலிடம் உண்டு. சராசரியாக ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற அளவில் அதிக வளர்ச்சி கண்டுவருகிறது இந்த தொழில்துறை. அனைவரும் கல்வியறிவு பெற்று வரும் இந்த சமுதாயத்தில், தங்களை நாகரீகமாக காட்டிக் கொள்ள விரும்பும் பழக்கமும் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும்கூட நாகரீக வளர்ச்சி, உடல் அழகு பேணும் போக்கு மேம்பட்டுக் கொண்டுதான் வருகிறது. எனவே ஆங்காங்கே அழகு நிலையங்கள் முளைத்து வருவதை கண்கூடாக காணலாம். இளைஞர்களும், இளம் பெண்களும் விதவிதமான ஸ்டைல்களில் சிகை அலங்காரம், முக அலங்காரம் செய்து கொள்வதை பெரிதும் விரும்புகிறார்கள். டாட்டு வரைதல், நவீன உடை அணிதல் என அவர்களின் அழகுப் பண்புகள் மெருகேறி வருகின்றன. எனவே அழகுக்கலை படிப்புக்கும் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

இப்படி வாய்ப்புகள் நிறைந்த அழகுக்கலை படிப்பில் பல பிரிவில் டிப்ளமோ வகுப்புகள் உள்ளன. பட்டப்படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்களும் உள்ளன. 6 மாதம் முதல் 3 வருடம் வரை பல படிப்புகள் உள்ளன. பியூட்டிசியன், காஸ்மெடாலஜி, பியூட்டி கல்ச்சர், மேக்கப், ஹேர் டிசைனிங், நெயில் ஆர்ட், நியூட்ரிசியன், ஸ்கின் தெரபி, பியூட்டி தெரபி, ஸ்பா தெரபி, ஹைடெபினிசன் மேக்கப், பேஷன் மேக்கப், போர்டோபோலியோ மேக்கப், ஏர் பிரஸ் டெக்னிக்ஸ், கரக்சன்ஸ் அண்ட் ஸ்கல்ப்டிங், பிரைடல் அண்ட் டிரெடிசனல் மேக்கப், மேக்கப் கன்சல்டேசன், செல்ப் குரூமிங், கார்பரேட் குரூமிங் என படிப்புகளின் உட்பிரிவுகள் நீளும்.

அரசு கல்வி நிறுவனங்களில் குறைந்த செலவில் இந்த படிப்புகளை படிக்க முடியும். பயிற்சி முடிய நீண்ட காலம் பிடிக்கும். அனைத்து விஷயங்களையும் ஆழமாக படித்து அறிய முடியும். ஆனால் தனியார் பயிற்சி மையங்களில் குறைந்த காலத்திலேயே இந்த தொழிற்கல்வியை கற்றுக் கொடுத்துவிடுகிறார்கள்.

அழகுக் கலை என்பது வெறுமனே நகப்பூச்சு போடுதல், மெழுகுப்பூச்சு போடுதல், கூந்தலை சரி செய்தல் என்பது மட்டுமல்ல. முகம் அழகு படுத்துதல், சருமத்தை சீர்படுத்துதல், ஊட்டச்சத்து மேம்பாடு, உடை மேம்பாடு, விருந்தோம்பல் முறை என பலவற்றைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு உண்டு.

அழகுக் கலை படிப்பை முடித்ததும் உங்கள் கையில் ஒரு தொழில் இருப்பதாக பெருமிதத்துடன் இருக்கலாம். கொஞ்சம் வசதியிருந்தால் நீங்களாகவே அழகுக்கலை மையம் தொடங்கிவிடலாம். சுயதொழில் கடன் பெறும் வாய்ப்புகளும் உள்ளது. அழகுக்கலை படித்த இல்லத்தரசிகள் நகர்ப்புறங்களில், வீட்டிலேயே தங்களுக்குத் தெரிந்த நட்பு வட்டாரத்திற்கு மட்டும் அலங்காரம் செய்து, வீட்டுச் செலவை கவனித்துக் கொள்வதும் உண்டு.

சுயதொழில் வாய்ப்பு மட்டுமல்லாமல் அழகுக் கலை படிப்பு படித்தவர்களுக்கு பல துறைகளிலும் வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக மருத்துவமனைகள், விமான நிறுவனங்கள், தொலைக்காட்சி நிலையங்கள், மாடலிங் துறை, சினிமாத் துறை, பொழுதுபோக்கு மற்றும் கலைத்துறை என பல துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. அழகுக்கலைத் துறையில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதிக மதிப்பெண் எடுத்து சாதிக்க முடியவில்லை என்பவர்கள், எளிதாக கற்கவும், கைநிறைய சம்பாதிக்கவும் ஏற்ற படிப்பாக அழகுக்கலை படிப்புகள் விளங்குகின்றன. நீங்களும் விரும்பினால் அழகுக் கலை படிப்புகளை ஒன்றை தேர்வு செய்யலாம்!

Next Story