தினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட மாட்டேன் சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி


தினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட மாட்டேன் சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி
x
தினத்தந்தி 24 April 2018 11:00 PM GMT (Updated: 24 April 2018 6:48 PM GMT)

திராவிடமும், அண்ணாவும் இல்லாத அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. தினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட மாட்டேன் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறினார்.

மன்னார்குடி,

சசிகலா சகோதரர் திவாகரன், மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றிவேல் என்பவர் யார்? எங்களை பற்றி குறை சொல்ல அவருக்கு தகுதி இல்லை. காங்கிரசில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தவர். மகாதேவன் இறந்த சமயத்தில் எம்.எல்.ஏ.க்களை தினகரன் அணிக்கு வரவேண்டாம் என்று நான் கூறியது உண்மைதான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.

திராவிடமும், அண்ணாவும் இல்லாத கட்சியை ஒருபோதும் ஏற்க முடியாது. அ.ம.மு.க.வுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அம்மா அணி என்றே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாங்கள் தனியாக கோரிக்கை வைத்துள்ளோம்.

தினகரன் நடத்தும் போராட்டங்களில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை.

நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்காமலேயே தினகரன் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியுள்ளார். அ.தி.மு.க என்ற சுவடே இருக்கக்கூடாது என்பதற்காக அ.ம.மு.க.வை தொடங்கியுள்ளார். அதில் நானே ராஜா நானே மந்திரி என்ற நினைப்பில் தினகரன் செயல்படுகிறார்.

சசிகலாவை சந்தித்து பொய்யான தகவல்களை கொடுத்து வருகிறார் தினகரன். இனி தினகரனுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. அ.ம.மு.க நேற்று முளைத்த காளான். நாங்கள் அம்மா அணி என்றே தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் அம்மா அணி என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story