சித்திரை மாத 2-வது செவ்வாய்க்கிழமையையொட்டி வைத்தீஸ்வரன்கோவிலில் நகரத்தார் விழா


சித்திரை மாத 2-வது செவ்வாய்க்கிழமையையொட்டி வைத்தீஸ்வரன்கோவிலில் நகரத்தார் விழா
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத 2-வது செவ்வாய்க்கிழமையையொட்டி வைத்தீஸ்வரன்கோவிலில் நகரத்தார் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசாமி, விநாயகர் மற்றும் அங்காரகன் (செவ்வாய்) உள்ளிட்ட சாமிகள் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இந்த கோவில் காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நகரத்தார் மக்களுக்கு குலதெய்வ கோவிலாக விளங்குகிறது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த நகரத்தார் மக்கள் பாதயாத்திரையாக வந்து வைத்தீஸ்வரன்கோவிலில் சாமி வழிபாடு செய்வர். அப்போது அவர்கள், பூ மற்றும் வேப்பிலையுடன் மஞ்சள் பூசப்பட்ட வேப்பமர குச்சிகளை கையில் எடுத்து வருவர். அவ்வாறு எடுத்து வருவதால் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்மன் கூடவே வருவதாக அவர்கள் கருதுகிறார்கள். பின்னர் கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்துவிட்டு, கோவில் கொடி மரத்தில் தாங்கள் கையில் எடுத்து வந்த வேப்பமர குச்சிகளை விட்டு செல்வர்.

இந்த விழா நகரத்தார் விழா என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நேற்று வைத்தீஸ்வரன்கோவிலில் நகரத்தார் விழா நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் வேப்பமர குச்சிகளுடன் மேற்கண்ட ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் குளத்தில் புனித நீராடினர்.

இதனை தொடர்ந்து வைத்தியநாத சாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி, செல்வமுத்துகுமாரசாமி, விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் விளக்கேற்றி காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த வேப்ப மர குச்சிகளை கோவிலில் உள்ள கொடி மரத்தடியில் விட்டு சென்றனர். விழாவையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து இருந்தது. மேலும் வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

Next Story