குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 22 பேர் மீட்பு


குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 22 பேர் மீட்பு
x
தினத்தந்தி 24 April 2018 10:00 PM GMT (Updated: 24 April 2018 9:24 PM GMT)

குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 6 குடும்பத்தை சேர்ந்த 22 பேர் மீட்கப்பட்டனர்.

வேலூர்,

கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு கமிட்டியினர், குடியாத்தம் தாசில்தார் கோபி மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் அம்மு, ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் குடியாத்தம் பகுதியில் உள்ள தொழிற்கூடங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது நாவல் கிராமத்தில் உள்ள ஒரு செங்கல்சூளையிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தாங்கள் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாகவும், ஒரு குடும்பத்திற்கு வாரம் ரூ.500 மட்டுமே கூலி வழங்குவதாகவும், வேறு பகுதிக்கு வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் பேரணாம்பட்டு, ஆனந்தகிரி, சாமியார்மலை மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதியில் உள்ள 6 குடும்பத்தை சேர்ந்த 22 பேர் 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரியவந்தது. அவர்களில் 12 பேர் சிறுவர்கள்-சிறுமிகள்.

அதைத்தொடர்ந்து அவர்களை மீட்ட அதிகாரிகள், வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு உதவி கலெக்டர் செல்வராஜ் அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர்கள் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் துணிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்கி அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story