எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் அரசு தயங்குகிறது: சாமிநாதன் குற்றச்சாட்டு


எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் அரசு தயங்குகிறது: சாமிநாதன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் அரசு தயக்கம் காட்டுகிறது என்று சாமி நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் அரியாங்குப்பம் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசினார். அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் கிராமப்புற மக்கள் அனைத்து தேவைகளையும் பெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஆனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசோ புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தயக்கம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பொறுப்புக்கு வந்தால் எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் பறிபோய்விடும் என்று ஆளும் காங்கிரஸ் அரசு பயப்படுகிறது. அதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்கி தாமதம் செய்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

எனவே புதுச்சேரி மாநிலத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும். குறிப்பாக வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இல்லையென்றால் பா.ஜனதா கட்சி சார்பில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story