கல்லூரி மாணவியை கொல்ல முயற்சி; காதல் பிரச்சினையில் என்ஜினீயர் வெறிச்செயல்


கல்லூரி மாணவியை கொல்ல முயற்சி; காதல் பிரச்சினையில் என்ஜினீயர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 1 May 2018 4:45 AM IST (Updated: 1 May 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

காதல் பிரச்சினையில் நாட்டறம்பள்ளி கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து என்ஜினீயர் கொல்ல முயன்றார்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் காதல் பிரச்சினையில் நாட்டறம்பள்ளி கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து என்ஜினீயர் கொல்ல முயன்றார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி முன்பு நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் நாட்டறாம்பள்ளி தாலுகா கேதண்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிராசு. இவருடைய மகள் லாவண்யா(வயது 23). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. (தோட்டக்கலை) 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

இவரும், வேலூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியை சேர்ந்த பிரகாசம் மகன் நவீன்குமார் (27) என்பவரும் பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்களாக பழகி, பின்னர் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. என்ஜினீயரிங் படித்த இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நவீன்குமாரும், லாவண்யாவும் செல்போன் மூலம் தினமும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக காதல் ஜோடிக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக நவீன்குமாரின் செல்போன் அழைப்புகளை லாவண்யா எடுக்கவில்லை. மேலும் அவர் தனது காதலனுடன் பேச மறுத்து வந்தார். இதனால் மனவேதனையில் இருந்த நவீன்குமார், தனது காதலியை நேரில் பார்க்க வேண்டும் என்றும் அப்போது அவர் சமாதானம் ஆகி பேசாவிட்டால் அவரை கொலை செய்துவிட வேண்டும் என்றும் திட்டம் தீட்டினார். அதன்படி, அவர் ஒரு கத்தியை வாங்கி மறைத்துக் கொண்டு நேற்று காலை சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு வந்தார்.

பின்னர் லாவண்யா தங்கியுள்ள தாமரை விடுதி முன்பு அவர் காத்திருந்தார். கல்லூரிக்கு செல்ல லாவண்யா விடுதியில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை நவீன்குமார் மறித்து பேச முயன்றார். ஆனால் லாவண்யா பேசமறுத்து, அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர், லாவண்யாவை தடுத்து நிறுத்தி, கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்தார். அப்போது அவர் சத்தம் போடவும், பொது மக்கள் நடமாடும் பகுதியில் மாணவியின் கழுத்தை அறுத்து ஒருவர் கொலை செய்ய முயன்ற காட்சியையும் கண்ட அப்பகுதியினர் ஒன்று திரண்டனர். பின்னர் சாலையில் கிடந்த கற்கள், கட்டைகளை எடுத்து நவீன்குமாரை தாக்கி, அவரிடமிருந்து லாவண்யாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நவீன்குமாரை பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட இருந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களிடம் பொது மக்கள் நவீன்குமாரை ஒப்படைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக போலீசார் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு திடீரென நவீன்குமார் சோர்ந்து மயங்கிய நிலைக்கு சென்றார். அப்போது அவர் தான் ஏற்கனவே விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். இதில் பதறிய டாக்டர்கள், உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story