தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க தற்போதைய ஆட்சி மாற வேண்டும் - கனிமொழி எம்.பி.


தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க தற்போதைய ஆட்சி மாற வேண்டும் - கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 2 May 2018 4:45 AM IST (Updated: 2 May 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க தற்போதைய ஆட்சி மாற வேண்டும் என கனிமொழி எம்.பி. கூறினார்.

கன்னியாகுமரி,

தொழிலாளர்களுக்கு நியாயம், மரியாதை கிடைக்க தற்போதைய ஆட்சி மாற வேண்டும் என கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி. கூறினார்.

குமரி மாவட்டத்துக்கு வந்த கனிமொழி எம்.பி. நேற்று கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க., தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை எந்த நேரத்திலும் மறுத்தது கிடையாது. அதில் நியாயமாக இருக்க கூடிய அனைத்து கோரிக்கைகளையும் அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே நிறைவேற்றித்தரக்கூடிய ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதி.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற அனைத்து உழைக்கும் மக்களும் வஞ்சிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். உழைப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நியாயமும், மரியாதையும் கிடைக்க வேண்டும். அதற்கு தற்போதைய ஆட்சி மாற வேண்டும். தமிழகத்தில் ஒரு விடியல் பிறக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மே தின விழாவாக அது கொண்டாடப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமாக தமிழகத்தின் முதல்-அமைச்சரோ, எதிர்க்கட்சி தலைவர்களோ டெல்லி சென்று பிரதமரை சந்திக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால்தான் இந்த பிரதமர் வேண்டாம் என்று தி.மு.க. சொல்லிக்கொண்டிருக்கிறது.

மத்தியில் இப்படி பட்ட ஒரு ஆட்சி தேவையில்லை. அதுவும் தமிழ்நாட்டை வஞ்சிக்கூடிய ஒரு ஆட்சி மத்தியில் தேவையில்லை. எல்லா மாநிலங்களுக்கும் மரியாதை கொடுக்க கூடிய, மக்களை மதிக்கக்கூடிய ஒரு ஆட்சி, ஒரு பிரதமர் மத்தியில் வர வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கை. பாராளுமன்றத்துக்கு குறித்த காலத்துக்கு முன்பாக தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் வந்தால் வரவேற்க கூடியதுதான்.

3-வது அணி தொடர்பான கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் தெளிவாக பதில் கூறியிருக்கிறார். தெலுங்கானா முதல் -மந்திரி சந்திரசேகர ராவ், கருணாநிதியை சந்தித்த போது தேர்தல் கூட்டணி பற்றி பேசவில்லை. மாநில உரிமைகள் பற்றிதான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி தொடருமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story