வனத்துறையினரை கண்டித்து சுற்றுலா வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் சாலை மறியல்
கொடைக்கானலில் வனத்துறையினரை கண்டித்து சுற்றுலா வாகன டிரைவர்கள், உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் வனத்துறையினரால் மூடப்பட்ட கோசன் ரோடு சோதனை சாவடியை திறக்க வேண்டும். பேரிஜம் ஏரிப் பகுதிக்கு சென்று வர அதிகப்படியான வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். வனப்பகுதியில் மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும்.
வனக்குழு என்ற பெயரில் பேரிஜம் ஏரி மற்றும் மன்னவனூருக்கு பயணிகளை ஏற்றி செல்லும் வனத்துறையின் வாகன சேவையை நிறுத்த வேண்டும். சுற்றுலா வாகன ஓட்டுனர்களை தரக்குறைவாக பேசும் அதிகாரிகள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிஜம் ஏரி சென்று வர வனத்துறையால் வசூல் செய்யப்படும் கட்டணத்தை ரத்து செய்து, செவ்வாய்க்கிழமைகளிலும் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா வாகனங்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த சுற்றுலா கார், வேன் டிரைவர்கள், நடத்துனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று காலை 9 மணியளவில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முன்வரவில்லை. இதை தொடர்ந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்று மூஞ்சிக்கல் பஸ்நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக் கானலுக்கு குளு, குளு சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, தாசில்தார் பாஸ்யம், முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இபுராகிம் ஆகியோர் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களில் சிலரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றனர். பின்னர் அவர்கள் மறியலை கைவிட்டு, மீண்டும் வனத்துறை அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர்.
அதனை அடுத்து மாவட்ட வன அதிகாரி முருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் வனத்துறை அலுவலக வாசலில் கூடாரம் அமைத்து சமையல் செய்யும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ. மோகன் தலைமையில் அதிகாரிகள் அங்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் டாக்சி டிரைவர் சங்க தலைவர் ரமேஷ், கவுரவ தலைவர் மணி உள்பட நிர்வாகிகள், வனத்துறை அதிகாரிகள், முன்னாள் நகரசபை தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், தன்னார்வ குழுவினர் பங்கேற்றனர். அதில் பல்வேறு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். பேரிஜம் ஏரிப் பகுதிக்கு தினசரி 125 வாகனங்களையும், தேவைப்பட்டால் அதற்கு மேலும் அனுமதிப்பது என்றும், செவ்வாய்க்கிழமைகளிலும் வாகனங்கள் அனுமதிக்கப்படு என்றும், சுற்றுலா வாகன டிரைவர்களை கண்ணியத்துடன் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் வனப்பகுதியில் வசூலிக்கப்படும் நுழைவு கட்டணங்களை ரத்து செய்வது குறித்தும், வனக்குழுவின் மூலமாக இயக்கப்படும் வாகனங்களை நிறுத்துவது குறித்தும் அரசிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து சுமார் 8½ மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தையொட்டி நகரில் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story