கோவில் திருவிழாவில் 2 பேர் குத்திக்கொலை பதற்றம்-போலீஸ் குவிப்பு


கோவில் திருவிழாவில் 2 பேர் குத்திக்கொலை பதற்றம்-போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 2 May 2018 4:30 AM IST (Updated: 2 May 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டு பிரச்சினையில் முன்விரோதம் அதிராம்பட்டினம் அருகே கோவில் திருவிழாவில் 2 பேர் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

அதிராம்பட்டினம்,

அதிராம்பட்டினம் அருகே சுடுகாட்டு பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக கோவில் திருவிழாவில் 2 பேர் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மஞ்சவயல் கிராமத்தில் அமைந்து உள்ள பாலசுப்பிரமணியன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 3 மணிக்கு தேரோட்டம் தொடங்க இருந்தது. இந்த தேரோட்டத்தை காண்பதற்காக மஞ்சவயல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே கோவிலுக்கு வந்து குவிந்து இருந்தனர்.

தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் கோவிலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் தேர் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் இரு பிரிவினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருபிரிவினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

அப்போது ஒரு பிரிவினர் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தி, சோடா பாட்டில்கள், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் எதிர்தரப்பினரை சரமாரியாக தாக்கினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் பதிலடி கொடுக்க முடியாமல் நிலை குலைந்து போனார்கள்.

கோவில் திருவிழாவில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதை பார்த்து கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் உயிர் தப்பிக்க நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த தாக்குதலில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சிவநேசன்(வயது 19), சண்முகசுந்தரம் மகன் பிரதீப்(31) ஆகிய இருவரும் கத்தியால் குத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். மேலும் விமல் ஆதித்தன்(26), வீரபாகு(20), கபிலன்(28), ராஜேஷ் கண்ணா(32), சண்முக சுந்தரம்(60) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜன், டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார் (தஞ்சை), சேகர் தேஷ்முக் (நாகப்பட்டினம்), மயில்வாகணன்(திருவாரூர்), பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன், அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் மோதலில் இறந்த இருவரின் உடல்களையும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேரோட்ட விழாவில் ஏற்பட்ட மோதல் மற்றும் இந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

மஞ்சவயல் கிராமத்தில் இரு பிரிவினர் இடையே அங்குள்ள சுடுகாட்டு பிரச்சினை சம்பந்தமாக நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டு உள்ளனர். கடந்த 2 நாளைக்கு முன்பு கூட இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நடந்த கோவில் தேரோட்ட நிகழ்ச்சிக்காக நேற்று முன் தினம் இரவு இரு தரப்பினரும் கோவிலுக்கு வந்து இருந்தனர். இரவு தேரோட்ட நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்தது. இதனால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த மோதலின்போது சிவநேசன், பிரதீப் இருவரும் கொல்லப்பட்டு உள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த மோதலைத்தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதலில் 2 பேர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story