விழுப்புரம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
மேலும் சாலைகளில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட அஞ்சி பெரும்பாலானோர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் சில இடங்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே மாரங்கியூர் பகுதியில் வீசிய சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலில் பயிர் செய்யப்பட்டிருந்த சுமார் 500 வாழை மரங்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன.
செஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடி-மின்னலுடன் மழைபெய்தது. இதனால் வெப்பம் தணிந்து காணப்பட்டாலும் நேற்று பகலில் மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
அனந்தபுரத்தை அடுத்து பனமலை மதுரா உமையாள்புரம் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடு உடைந்து விழுந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காதர்பேக் மனைவி பியாரி(68) படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சூறைக்காற்று வீசியதால் செஞ்சி பகுதியில் 12 மின்கம்பங்கள் சாய்ந்ததாகவும், மின்னல் தாக்கி ஏராளமான மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளதாகவும், அவற்றை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆனந்தநாராயணன் தெரிவித்தார்.
திண்டிவனத்தில் அதிகாலை 2 மணி முதல் 3 மணிவரை ஒரு மணி நேரம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால் மின் தடை ஏற்பட்டது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்னல் தாக்கியதால் தாளவாடி, காவேரிப்பாக்கம், கண்ணையாநகர், பூதேவி, மரக்காணம் சாலை உள்ளிட்ட 15 இடங்களில் மின்மாற்றிகள் சேதம் அடைந்தன.
இதுபற்றிய தகவல் அறிந்த மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சாய்ந்த மின்கம்பங்களையும், சேதம் அடைந்த மின்மாற்றிகளையும் சரிசெய்தனர்.
உளுந்தூர்பேட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் எதலவாடி கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்தன. இதேபோல் சுற்றிலும் உள்ள கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மேலும் மரக்காணம் பகுதியில் பெய்த மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்து, மீண்டும் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
அதேபோல் வானூர், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வானூரில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. செஞ்சியில் 18 மி.மீட்டரும், திண்டிவனத்தில் 17 மி.மீட்டரும், மரக்காணத்தில் 16 மி.மீட்டரும், விழுப்புரத்தில் 4 மி.மீட்டரும் மழை பதிவானது.
அதிகாலை வேளையில் பெய்த கோடை மழையினால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது. கடந்த 2 மாதங்களாக கோடை வெப்பத்தினால் மிகவும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நேற்று பெய்த இந்த மழையினால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story