தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது


தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
x
தினத்தந்தி 3 May 2018 5:00 AM IST (Updated: 3 May 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக கடலூரில் நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர், 

அ.தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.

அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் நவநீதகண்ணன், கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு வங்கி அண்ணா தொழிற்சங்கம் சுப்பிரமணியன், வடலூர் தொழிற்சங்க தலைவர் சிங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளரும், நகைச்சுவை நடிகையுமான வாசுகி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, முத்துக்குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பீகார், மராட்டியம், கர்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் குறைவு தான். தொழிற்சாலைகள் நிறைந்த தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி உதவி, உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டுத்தொகை போன்ற பல்வேறு உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிலாளர் நலன் காக்கும் அரசாக, தோழனாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர்களின் சிரமங்களை போக்குகிற, அவர்களை பாதுகாக்கும் தலைசிறந்த அரசாக இந்த அரசு உள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலை பெற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பெருமாள்ராஜா, நகர துணை செயலாளர் கந்தன், நகர அவை தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, வெங்கட்ராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பாபு, முன்னாள் கவுன்சிலர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், வார்டு செயலாளர்கள் பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மின்சார பிரிவு கடலூர் மண்டல செயலாளர் பரணி நன்றி கூறினார்.

Next Story