டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 May 2018 11:00 PM GMT (Updated: 2 May 2018 7:56 PM GMT)

பெண்ணாடம் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ளது மாளிகைகோட்டம் ஊராட்சி. இந்த கிராமத்தின் எல்லையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் மதுகுடித்துவிட்டு காலி பாட்டில்களை விளைநிலங்களில் வீசி செல்கின்றனர். மேலும், அந்த வழியாக வயல்வெளிக்கு வேலைக்கு செல்லும் பெண்களை கேலி செய்தும், அவ்வழியாக செல்பவர்களிடமும் வீண் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் இந்த கடையை அங்கிருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இவர்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடந்த மார்ச் மாதம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கடிதத்தை கிராம மக்களிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் ஏப்ரல் மாதம் முடிந்தும் அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்காலிகமாக கடையை மூடவும், வேறு இடத்திற்கு விரைவில் கடையை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த டாஸ்மாக் கடை நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story