காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 May 2018 4:30 AM IST (Updated: 3 May 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, மாநில இணை செயலாளர் பாரத்கருணாநிதி, மாவட்ட செயலாளர்கள் சங்கர், லெனின், கருணாநிதி, ஜெரோம்பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தொடங்கி வைத்தார். கால்நடை ஆய்வாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் தாமோதரன் கலந்து கொண்டு பேசினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் மாநில தலைவர் துரைசாமி முடித்து வைத்தார். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் முத்துராஜா வரவேற்றார். முடிவில் மாநில பொருளாளர் காமராஜ் நன்றி கூறினார்.

முன்னதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் முடக்க மறைமுகமாக முயற்சி செய்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் பிரதமர் மோடி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்து விட்டார்.

இது குறித்து குடியரசு தலைவரிடம் முறையிட அனுமதி கேட்டு கடிதம் எழுதி உள்ளோம். ஆனால் அனுமதிவரவில்லை. இந்த நிலையில் சென்னை வரும் குடியரசு தலைவரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை அனுமதி வரவில்லை. குடியரசு தலைவரை விவசாயிகள் சந்திக்க அனுமதி வாங்கித்தருமாறு கவர்னருக்கும் கடிதம் எழுதி உள்ளோம். குடியரசு தலைவர் ஏன் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். அவர் விவசாயிகளை அவமதிக்க வேண்டாம். எங்கள் குறைகளை கேட்க வேண்டும்

அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாயிகளை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மறுக்கவில்லை என கூறுகிறார். பிரதமர் மறுக்கவில்லை என்றால் ஏன் சென்று சந்திக்கவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையே போட்டி உள்ளது என்ற சந்தேகம் உள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்”என்றார்.

கால்நடை ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடாசலம் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். இனியும் அமைக்காமல் தாமதப்படுத்தினால் அடுத்தகட்டமாக தீவிரமாக போராட்டம் நடத்துவோம்”என்றார். 

Next Story