வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஓட்டல்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை வரி ரசீது வழங்காவிட்டால் நடவடிக்கை; அதிகாரி எச்சரிக்கை


வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஓட்டல்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை வரி ரசீது வழங்காவிட்டால் நடவடிக்கை; அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 May 2018 11:00 PM GMT (Updated: 2 May 2018 9:37 PM GMT)

புதுவையில் உள்ள ஓட்டல்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள ஓட்டல்களில் சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி) முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து வணிக வரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ் உத்தரவின் பேரில் வணிக வரித்துறை அதிகாரி (சேவைப்பிரிவு) தேவி ராஜலட்சுமி தலைமையில் துணை வணிக வரி அதிகாரி புகழேந்தி, உதவி வணிக வரி அதிகாரி புனிதவள்ளி ஆகியோர் முதலியார்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டல்களில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது ஓட்டலில்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் சரக்கு மற்றும் சேவை வரி முறையாக வசூலிக்கப்படுகிறதா? ஓட்டல் உரிமையாளர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுகிறார்களா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற திடீர் சோதனை வணிக நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி வணிக வரித்துறை ஆணையர் ஸ்ரீநிவாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுவை வணிக வரித்துறை சார்பில் ஆய்வுகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் கடந்த மாதம் 142 வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில் ரசீது வழங்காத மற்றும் விற்பனையை குறைத்து காட்டிய 9 வணிக நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.

அந்த நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே செலுத்த வேண்டிய வரியாக ரூ.40 லட்சத்து 83 ஆயிரமும், அபராதமாக ரூ.6 லட்சத்து 80 ஆயிரமும் என மொத்தம் ரூ.47லட்சத்து 63 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. முறையாக ரசீது வழங்காத 2 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு தலா ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கடந்த மாதம் 6 இடங்களில் வாகன சோதனை நடத்தியதில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதற்கான அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

வணிகர்கள் குற்ற நடவடிக்கையில் இருந்து தவிர்க்க நுகர்வோருக்கு முறையான வரி ரசீதினை வழங்க வேண்டும். அனைத்து பரிவர்த்தனைகளையும் மாதாந்திர ரிடர்ன்ஸ் சரியாக சமர்பிக்க வேண்டும். உள்மாநில, வெளிமாநில பரிவர்த்தனைகளுக்கு முறையான மின்வழி ரசீது கட்டாயம் உருவாக்க வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story