நாகர்கோவிலில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது


நாகர்கோவிலில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 4 May 2018 4:15 AM IST (Updated: 3 May 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது. முதல் நாளில் 100 பேர் பதிவு செய்தனர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழக அரசு இதுவரை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 21 ஆண்டுகளாக நடத்தி வந்தது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு ஆகும் பயணச் செலவு உள்ளிட்ட செலவினங்கள், வீண் அலைச்சல் போன்றவற்றை அரசு கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் தமிழக என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை இணையதளம் வாயிலாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் வழியாக நடைபெறும் இந்த கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையத்தில் நேற்று முதல் என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வரும், உதவி மைய ஒருங்கிணைப்பாளருமான டி.வி.சிவசுப்பிரமணியபிள்ளை ஆன்லைன் முறையிலான விண்ணப்ப பதிவை தொடங்கி வைத்தார். கல்லூரி கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த உதவி மையத்தில் வருகிற 30–ந் தேதி வரை பதிவு செய்யலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த மையத்தில் ஒரே நேரத்தில் அதாவது 15 நிமிடத்தில் 60 பேருக்கும், ஒரு மணி நேரத்தில் 240 பேருக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் வகையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பம் பதிவு செய்வதற்காக வந்தவர்கள் அமர வசதியாக ஏராளமான இருக்கைகளும் போடப்பட்டுள்ளன.

பதிவு செய்ய வரும் மாணவ– மாணவிகளுக்கு உதவ, உதவி மைய இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஸ்ரீரங்கராஜா, பேராசிரியர் ஆதிமூலம் உள்பட 30 பேர் பதிவு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவி செய்தனர். முதல் நாளான நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. ஆனாலும் ஒன்றிரண்டு பேராக காலையில் இருந்து மாலை வரை வந்து கொண்டிருந்தனர். நகர்ப்புற மாணவர்களைவிட கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் வந்து பதிவு செய்தனர். காலையில் இருந்து மாலை வரை சுமார் 100 பேர் விண்ணப்ப பதிவு செய்ததாக கல்லூரி முதல்வர் டி.வி.சிவசுப்பிரமணியபிள்ளை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:–

என்ஜினீயரிங் சேர்க்கைக்கு முதல் கட்டமாக ஆன்லைன் முறையில் விண்ணப்ப பதிவு தற்போது நடைபெறுகிறது. இதற்காக நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யும்போது இடையூறுகள் ஏற்படாமல் இருக்க தனி நெட்வொர்க் பெறப்பட்டுள்ளது. வருகிற 30–ந் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும். கடந்த ஆண்டு 5 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் விற்பனையானது. ஆனால் தற்போது நடைபெறும் ஆன்லைன் பதிவுக்கு 2500 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஏன் என்றால் மார்த்தாண்டம் போன்ற தொலைதூரங்களில் உள்ளவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே இணையதள மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்வார்கள். வீட்டில் கம்ப்யூட்டர் வசதி உள்ளவர்கள் வீடுகளிலேயே பதிவு செய்யவும் வாய்ப்புள்ளது. எனவே உதவி மையத்துக்கு வருகை தருபவர்கள் சந்தேகமின்றி விண்ணப்பம் பதிவு செய்ய நாங்கள் உதவியாக இருப்போம்.

2–வது கட்டமாக ஜூன் மாதம் 2–வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். விண்ணப்ப பதிவின்போது எந்த உதவி மையத்தை மாணவர் தேர்வு செய்தாரோ அந்த மையத்துக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு கட்டாயம் நேரடியாக செல்ல வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மாணவர்களால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு செல்ல வேண்டும்.

அதைத்தொடர்ந்து 3–வது கட்டமாக ஜூலை மாதத்தில் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன்னுரிமை அடிப்படையில் எத்தனை கல்லூரிகளை வேண்டும் என்றாலும் தேர்வு செய்து பட்டியல் கொடுக்கலாம். தேர்வு செய்த கல்லூரிகளை மாற்றிக்கொள்ள 3 நாட்கள் வரை கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கால அவகாசம் முடிந்து கல்லூரி ஒதுக்கப்பட்ட பின்னர் மாணவருக்கு அந்த கல்லூரி வேண்டாம் என்றால் அந்த கலந்தாய்வில் இருந்து வெளியேறிவிட்டு, மீண்டும் 2–வது கட்டமாக நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு வேறு கல்லூரிகளின் பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யலாம்.

இவ்வாறு கல்லூரி முதல்வர் டி.வி.சிவசுப்பிரமணியபிள்ளை கூறினார்.

Next Story