ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்


ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2018 3:45 AM IST (Updated: 3 May 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் ஆசிரியர் இயக்கத்தினர் மனு கொடுத்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் நேற்று ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் அதன் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் விழுப்புரம் கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 30-ந் தேதி இயக்குனர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை பரிசீலனை செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்குள் தகுதியுள்ள வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை தகுதியுள்ள வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இது, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜனநாயக முறைப்படியும், தேர்தல் விதிப்படியும் செயல்படவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. எனவே ஒருதலைபட்சமாக, முறையின்றி செயல்படும் தேர்தல் அலுவலரை உடனடியாக விடுவித்து புதிய தேர்தல் அலுவலரை நியமித்து தகுதியுள்ள வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஜனநாயக முறைப்படியும், தேர்தல் விதிமுறைகளின்படியும் தேர்தல் நடத்த வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story