புதிய கார் வாங்கி தருவதாக கூறி பா.ஜனதா பிரமுகரிடம் ரூ.3 லட்சம் மோசடி


புதிய கார் வாங்கி தருவதாக கூறி பா.ஜனதா பிரமுகரிடம் ரூ.3 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 4 May 2018 4:45 AM IST (Updated: 4 May 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலையில் புதிய கார் வாங்கி தருவதாக கூறி, பா.ஜனதா பிரமுகரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், வேலன் நகர், 8-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(வயது 43). பா.ஜனதா பிரமுகர். இவர் புதிதாக கார் வாங்க விரும்பினார். அப்போது ராயப்பேட்டையை சேர்ந்த சையத் கபீர்(27) என்பவர் ஆன்-லைனில் குறைந்த விலையில் புதிய கார்கள் வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்திருந்தார்.

அந்த விளம்பரத்தை பார்த்த ராஜேஷ் கண்ணா, சையத் கபீரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர், ஆதார், பான் கார்டு கொடுத்தால் போதும் ரூ.26 லட்சம் மதிப்புள்ள காரை ரூ.11 லட்சத்திற்கு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி ராஜேஷ் கண்ணா அவரிடம் ஆவணங்களை கொடுத்தார்.

அதன்பிறகு 2 நாட்கள் கழித்து, ராஜேஷ்கண்ணாவை தொடர்பு கொண்ட சையத் கபீர், கார் தயாராகிவிட்டது. குறைந்த விலையில் கார் எடுத்து வருவதால் அதற்கு ரூ.3 லட்சம் வரி கட்டவேண்டும் என்று கூறினார். ராஜேஷ் கண்ணா, அதனை உண்மை என்று நம்பி ஆன்-லைன் மூலம் ரூ.3 லட்சத்தை சையத் கபீருக்கு அனுப்பி உள்ளார்.

ஆனால் இதுவரையிலும் காரும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டு சையத்கபீர் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசில் ராஜேஷ்கண்ணா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராயப்பேட்டையில் பதுங்கி இருந்த சையத் கபீரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், இதேபோல் பல இடங்களில் ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story