தேனி பாரஸ்ட்ரோட்டில் சுகாதாரக்கேட்டால் பரிதவிக்கும் மக்கள்
தேனி பாரஸ்ட்ரோடு குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
தேனி,
தேனி நகரில் பாரஸ்ட்ரோடு பகுதியானது முக்கிய குடியிருப்புகளில் ஒன்றாக உள்ளது. இங்கு 12 தெருக்களும், ஏராளமான குறுக்குத் தெருக்களும் உள்ளன. இந்த பகுதியில் வெளியேறும் கழிவுநீர் 1-வது தெருவுக்கும், அண்ணா நகர் பகுதிக்கும் இடைப்பட்ட ராஜாக்காடு பகுதி வழியாக செல்கிறது.
இங்குள்ள ஓடை வழியாக கழிவுநீர் மதுரை சாலையை கடந்து ராஜவாய்க்காலில் கலக்க வேண்டும். இந்த ஓடையானது ஒரு காலத்தில் பாரஸ்ட்ரோடு பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிந்து செல்லும் ஓடையாக பயன்பட்டு வந்தது. தற்போது கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறி விட்டது. இந்த ஓடையில் செல்லும் நீர் மதுரை சாலையை கடந்து ராஜவாய்க்காலில் சங்கமிக்கும்.
ஒரு காலத்தில் ஓடையில் நல்ல தண்ணீர் ஓடியது. நாளடைவில் சாக்கடை கழிவுநீர் ஓடியது. தற்போது கழிவுநீரும் செல்வதற்கு வழியின்றி ஓடை தூர்ந்து போனதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில், தற்போது ஓடையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தெருக்களிலும் சாக்கடை கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது.
அதிகரித்து வரும் சுகாதாரக்கேடு காரணமாக மக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த ஓடையையும், கழிவுநீர் கால்வாயையும் தூர்வாரி, கழிவுநீர் தேங்காமல் கடந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story