கொடைக்கானல் பகுதியில் மழை: நிரம்பி வழியும் பழனி கோடைகால நீர்த்தேக்கம்


கொடைக்கானல் பகுதியில் மழை: நிரம்பி வழியும் பழனி கோடைகால நீர்த்தேக்கம்
x
தினத்தந்தி 4 May 2018 3:45 AM IST (Updated: 4 May 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் பெய்த மழை காரணமாக பழனி கோடைகால நீர்த்தேக்கம் தற்போது நிரம்பி வழிகிறது.

பழனி

பழனி-கொடைக்கானல் சாலையில் புளியமரத்து செட் அருகே கோடைகால நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. கொடைக்கானல் பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் கோடைகால நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாக கோடைகால நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து இல்லை.

இதன் காரணமாக நீர்மட்டமும் குறைய தொடங்கியது. இதனால் கோடைகாலத்தில் பழனி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் பகுதியில் மழை பெய்தது. இதன் காரணமாக கோடைகால நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக தற்போது கோடைகாலநீர்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய தொடங்கி உள்ளது. இது குறித்து பழனி நகராட்சி பொறியாளர் சண்முகத்திடம் கேட்ட போது, கொடைக்கானல் பகுதியில் பெய்த மழை காரணமாக 11.5 அடி உயரம் கொண்ட கோடைகால நீர்த்தேக்கம் தற்போது நிரம்பி வழிகிறது.

அணைகளின் நீர்மட்டம் குறைந்தாலும், கோடைகால நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பதன் காரணமாக கோடைகாலம் முழுவதும் பழனி நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

Next Story