காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது


காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2018 11:00 PM GMT (Updated: 3 May 2018 8:17 PM GMT)

திருமூர்த்தி அணை பகுதியில் காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தளி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திஅணை உள்ளது. இந்த அணையை யொட்டி பிரசித்த பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரம்மா-சிவன்-விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

அத்துடன் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுவர்பூங்கா, நீச்சல்குளம், படகுஇல்லம், வண்ணமீன் காட்சியகம் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதனால் திருமூர்த்திமலையின் இயற்கை சூழலை ரசிக்கவும், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும், மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் தினந்தோறும் ஏராளமான வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றார்கள். இதன் காரணமாக உடுமலை பகுதியில் திருமூர்த்திமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது.

தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்துடன் திருமூர்த்திமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் அங்குள்ள தைலக்காடு மற்றும் அணையின் திறந்தவெளி பகுதியில் புகைப்படம் எடுத்தும் இயற்கை அழகை ரசித்தும் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் காதலர்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் திருமூர்த்தி அணைப்பகுதியில் நேற்று ஏராளமான காதல்ஜோடிகள் சுற்றித்திரிந்தனர். அப்போது அவர்களிடம் மர்ம ஆசாமிகள் தாங்கள் வனத்துறையினர் என்று கூறிக்கொண்டு அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்கு அபராதம் செலுத்துங்கள் இல்லையென்றால் கைது செய்து போலீசில் ஒப்படைத்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகமடைந்த காதலர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர்.

காதலர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். வனத்துறையினர் வருவதை பார்த்த மர்ம ஆசாமிகள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் பொதுமக்களின் உதவியுடன் அந்த 4 மர்ம ஆசாமிகளையும் வனத்துறையினர் விரட்டிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி முன்னிலையில் போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மர்ம ஆசாமிகளிடம் தளி போலீசார் விசாரணையை நடத்தினார்கள். இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி(வயது 28), பிரகாஷ்(27), திருமூர்த்திநகரை சேர்ந்த அய்யாச்சாமி (23), வீரக்குமார்(23) என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து உடுமலை ஜே.எம். எண் 2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அவர்கள் 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்திரவிட்டார்.

Next Story