அரசு பள்ளியில் ரூ.1.38 கோடியில் 6 வகுப்பறைகள் கட்டும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்


அரசு பள்ளியில் ரூ.1.38 கோடியில் 6 வகுப்பறைகள் கட்டும் பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 May 2018 10:45 PM GMT (Updated: 3 May 2018 9:17 PM GMT)

வே.முத்தம்பட்டி அரசு பள்ளியில் ரூ.1.38 கோடியில் 6 வகுப்பறைகள் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் வே.முத்தம்பட்டி, பேகாரஅள்ளி, ஒடசல்பட்டி, பெரியாம்பட்டி, பொம்மஅள்ளி, வேப்பம்பட்டி ஆகிய அரசு பள்ளிகளுக்கு புதியதாக வகுப்பறைகள், ஆய்வக கட்டிடம் ஆகியவை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.13 கோடியே 5 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வே.முத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகிறது. அந்த பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் வசதி பள்ளி சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் கூறுகையில், தமிழக அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நபார்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகிறது. இந்த வசதிகளை மாணவ-மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், உதவி செயற்பொறியாளர்கள் தியாகராஜன், செந்தில், முன்னாள் நகராட்சி உறுப்பினர் பூக்கடை ரவி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story