காவிரி நதிநீர் பிரச்சினையில் 7½ கோடி தமிழர்களை பிரதமர் மோடி அவமதித்து விட்டார்


காவிரி நதிநீர் பிரச்சினையில் 7½ கோடி தமிழர்களை பிரதமர் மோடி அவமதித்து விட்டார்
x
தினத்தந்தி 4 May 2018 4:30 AM IST (Updated: 4 May 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நதிநீர் பிரச் சினையில் 7½ கோடி தமிழர்களை பிரதமர் மோடி அவமதித்து விட்டார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

பட்டுக்கோட்டை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக எனது உறவினர் உள்பட 4 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். அவர்களுக்கு வருகிற 24-ந் தேதி வீரவணக்கம் செலுத்த இருக்கிறோம். அதற்காக அனைத்துக் கட்சியினரையும் அழைத்திருக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்ட முடியாது. தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதை தடுக்க முடியாது. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு சமமானது.

தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் கூடி காவிரியை காப்பாற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி வாய்ப்பளிக்கவில்லை. 7½ கோடி மக்களின் சார்பாக சந்திக்க நேரம் கேட்டதை பிரதமர் மோடி நிராகரித்து விட்டார். 7½ கோடி தமிழர்களை அவமதித்து விட்டார்.

மோடி, ஒருக்காலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார். தமிழகத்தை அழித்து பாலைவனமாக்கி எரிவாயு எடுத்து கொள்ளையடிக்க அனுமதித்து விட்டார். காவிரிக்கு துரோகம் செய்யும் நீங்கள், தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியாது. தமிழக அரசே மத்திய அரசுக்கு பக்கபலமாக இருக்காதீர்கள். தஞ்சை தரணி மக்கள் பொங்கி எழுந்தால் உங்கள் பின்னால் தமிழகமே கொதித்து எழும்.

நதிகளை இணைக்க மதுவை ஒழிக்க 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டேன். இப்போது வெள்ளித்திரையிலே இருந்து சிலர் திடீர் என்று வந்து குதித்திருக்கிறார்கள். வெள்ளித்திரையிலே கதாநாயகனாக நடித்து விட்டு இப்போது வந்துள்ளவர்கள் எத்தனை பேர் மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் இதுவரையில் எங்கே இருந்தார்கள்?. இப்போது வந்து குதித்திருக்கிறார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகரசபை முன்னாள் தலைவர் ஜெயபாரதி விசுவநாதன், மாவட்ட தி.மு.க செயலாளர் துரை.சந்திரசேகரன், ம.தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் அண்ணாதுரை, சி.பக்கிரிசாமி(இ.கம்யூ), சக்கரவர்த்தி(விடுதலை சிறுத்தைகள்) வீரையன்(திராவிடர் கழகம்), ஆடுதுறை முருகன் (ம.தி.மு.க) மற்றும் பலர் பேசினர். தொடக்கத்தில் நகர ம.தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் மாணவர் அணி அமைப்பாளர் ரவி நன்றி கூறினார். 

Next Story