குட்கா தொழிற்சாலை உரிமையாளரை பிடிக்க டெல்லியில் போலீசார் முகாம்


குட்கா தொழிற்சாலை உரிமையாளரை பிடிக்க டெல்லியில் போலீசார் முகாம்
x
தினத்தந்தி 3 May 2018 10:45 PM GMT (Updated: 3 May 2018 10:10 PM GMT)

குட்கா தொழிற்சாலையில் கைப்பற்றிய பொருட்களை கோர்ட்டில் ஒப்படைக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சூலூர்,

சூலூர் அருகே கள்ளத்தனமாக செயல்பட்ட குட்கா தொழிற்சாலையில் கைப்பற்றிய பொருட்களை கோர்ட்டில் ஒப்படைக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். உரிமையாளரை பிடிக்க டெல்லியில் போலீசார் முகாமிட்டு இருக்கிறார்கள்.

கோவை கண்ணம்பாளையத்தில் கள்ளத்தனமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆலை மேலாளர் ரகுராமன் மற்றும் அங்கு பணி புரிந்த வடமாநில ஊழியர்கள் 3 பேரை கைது செய்து போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.இதை நடத்தி வந்த டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் அமித் ஜெயினை கைது செய்ய தனிப்படை டெல்லியில் முகாமிட்டு தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளது. அமித்ஜெயின் சேலம், ஈரோட்டில் ஜவுளி ஆலைகளை நடத்தி வந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தான் கண்ணம்பாளையத்தில் ஆலை அமைப்பதற்காக நிலத்தை வாங்கி, 2013-ம் ஆண்டு முதல் பான் மசாலா தயாரிக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார்.

தமிழக அரசு 2013-ம் ஆண்டு குட்காவுக்கு தடை விதித்த பின்னர் இந்த ஆலையில் சட்டவிரோதமாக குட்காவை தயாரித்துள்ளனர். நள்ளிரவு நேரங்களில் இங்கிருந்து குட்கா பாக்கெட்டுகளை வாகனங் களில் ஏற்றி மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளனர்.

அமித்ஜெயினுக்கு அரசியல்வாதிகள் பலருடன் தொடர்பு இருந்துள்ளது. கோவையில் அரசியல் பிர முகர்கள் பலரும் அமித்ஜெயினுடன் நெருங்கி பழகி உள்ளனர். சென்னையில் குட்கா ஆலை நடத்தி வந்த மாதவராவுக்கும், அமித் ஜெயினுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

தொழிற்சாலையில் உள்ள கணினியில் பணபரிவர்த்தனை விவரங்கள் இருந்தன. அதில் யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பதை கண்டுபிடிக்க ஆலை மேலாளர் ரகுராமனை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சூலூர் கோர்ட்டில் போலீஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. கோர்ட்டு உத்தரவிட்டதும் ரகுராமனை காவலில் எடுத்து குட்கா தொழிற்சாலை தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

குட்கா தொழிற்சாலையில் 648 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பிற பொருட் களுமாக ரூ.78.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆலையில் இருந்து ஏராளமான ஆவணங்கள், கணினியில் இருந்து ஏராளமான பதிவுகளையும் கைப்பற்றினர். மேலும் குட்கா தயாரிக்க பயன்படுத்தப் படும் எந்திரங்கள் என லட்சக்கணக் கான மதிப்புடைய பொருட்கள் இருந்தன. இதையடுத்து வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் தொழிற்சாலையின் 4 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் குட்கா ஆலைக்குள் நேற்று காலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சென்றனர். இதனால் ஆலைக்குள் உள்ள ரகசிய குடோன்களில் சோதனை நடத்துவதற்காக போலீசார் சென்றதாக தகவல்கள் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, சம்பவத்தன்று சோதனை நடந்த போது ரூ.78.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான பணி நடந்து வரு கிறது. அந்த பணிகள் முடிந்ததும் இன்று (வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story