ரூ.216 கோடி மதிப்பீட்டில் உக்கடம் மேம்பால ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கின


ரூ.216 கோடி மதிப்பீட்டில் உக்கடம் மேம்பால ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கின
x
தினத்தந்தி 4 May 2018 4:45 AM IST (Updated: 4 May 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

ரூ.216 கோடி மதிப்பீட்டில் உக்கடம் மேம்பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கின.

கோவை,

ரூ.216 கோடி மதிப்பீட்டில் உக்கடம் மேம்பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கின. இதனால் புட்டுவிக்கி சாலை வழியாக போக்குவரத்தை திருப்பி விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உக்கடம்- ஆத்துப்பாலம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையை கடந்த மாதம் 29-ந்தேதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். நிலம் கையகப்படுத்த ரூ.85 கோடியும், மேம்பால கட்டுமான பணிகளுக்கு ரூ.131 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1.97 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக ஆத்துப்பாலம் சுங்கச்சாவடியில் அருகே கரும்புக்கடை பகுதியில் இருந்து தொடங்கி உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையில் திரும்பும் வகையிலும், மற்றொரு வழித்தடம் நாஸ் தியேட்டர் அருகே ஏறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்துக்கு மொத்தம் 55 தாங்கு தூண்கள் அமைக்கப்படு கிறது. மேம்பாலத்தின் மேல் 52 எண்ணிக்கையிலான தளங்கள் அமைக்கப்படுகிறது. மொத்தம் 3 பகுதிகளாக இந்த மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல் பகுதியில் ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் சந்திப்பு வரை 4 வழிச்சாலையாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இது 1,341 மீட்டர் நீளமும், 16.60 மீட்டர் அகலத்திலும் 45 தாங்கு தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது.

2-வது பகுதியில் உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்காரவீதி வரையில், உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலையில் யூ வடிவில் இறங்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இது 344 மீட்டர் நீளமும், 16.60 மீட்டர் அகலத்திலும் 5 தாங்கு தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது. 3-வது பகுதி டவுண்ஹால் நாஸ் தியேட்டர் சந்திப்பு பகுதி முதல் உக்கடம் சந்திப்புவரை இருவழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. இது 284 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலத்திலும் 5 தாங்கு தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது மேம்பால தூண் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்படும் இடங்கள் குறியீடு செய் யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் உக்கடம்-ஆத்துப்பாலம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உக்கடத்தில் இருந்து பேரூர் பைபாஸ் சாலை வழியாக புட்டுவிக்கி சாலை தொடங்கும் இடத்தில் இடதுபுறம் ராஜவாய்க்கால் கரையோரம் திரும்பி பாலக்காடு சாலை குனியமுத்தூரை அடையும் வகையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பாதை அமைத்து தார்சாலை அமைக்கும் பணியை மாநகராட்சியுடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த பணிகள் முடிவடைந்துவிட்டது.

குனியமுத்தூரில் இருந்து சுண்டக்காமுத்தூரை அடையும் வகையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுற வழித்தடம் கொண்ட சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணி முடிக்கப்பட உள்ளது. பாலக்காடு சாலை மைல்கல் முன்பு இ.பி. குடியிருப்பு பகுதியில் திரும்பி பேரூர் அருகே சுண்டக்காமுத்தூர் சாலை வழியாக நகரை அடையும் வகையில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குளத்துப்பாளையம்- மாச்சம்பாளையம்- இடையர்பாளையம் பிரிவு வந்து நகரை அடையும் வகையில் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. உக்கடம்-ஆத்துப்பாலம் பகுதியில் பால பணிகள் நடைபெற்றாலும் ஒரு பகுதி வழியாக போக்குவரத்து செல்லவும் சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற உள்ளது.

மேம்பால பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது, புட்டுவிக்கி சாலை உள்ளிட்ட புதிய சாலைகள் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படப்படும். மேம்பால பணிகளை 30 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story