அந்தேரி- விரார் இடையே ஸ்லோ வழித்தடத்தில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவை


அந்தேரி- விரார் இடையே ஸ்லோ வழித்தடத்தில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவை
x
தினத்தந்தி 4 May 2018 4:53 AM IST (Updated: 4 May 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரி- விரார் இடையே ஸ்லோ வழித்தடத்தில் 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் சேவைகளை இயக்க மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

மும்பை,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட்- பாந்திரா, அந்தேரி, பயந்தர், வசாய், விரார், தகானு வரையிலும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக விரார்- அந்தேரி இடையே அதிகளவில் பயணிகள் மின்சார ரெயில்களில் பயணிக்கிறார்கள். 12 மற்றும் 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், 12 பெட்டி மின்சார ரெயிலில் 4 ஆயிரத்து 300 பயணிகளும், 15 பெட்டி மின்சார ரெயிலில் 5 ஆயிரம் பயணிகள் வரையிலும் பயணம் செய்கின்றனர்.

பிளாட்பாரங்களின் நீளம் குறைவு காரணமாக தற்போது, விரைவு வழித்தடத்தில் மட்டும் தான் 15 பெட்டி மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், அந்தேரி- விரார் இடையே பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மேற்கு ரெயில்வே ஸ்லோ வழித்தடத்தில் 15 பெட்டி மின்சார ரெயில் சேவைகளை அறிமுகம் செய்ய முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி மேற்கு ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி ரவீந்திர பார்க்கர் கூறுகையில், ‘அந்தேரி- விரார் இடையே ஸ்லோ வழித்தடத்தில் மின்சார ரெயில்களை இயக்குவதற்கு வசதியாக ரெயில் நிலைய பிளாட்பாரங்களின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் ரூ.25 கோடி செலவில் செய்யப்படும். பணிகளை செய்வதற்கான ஒப்பந்ததாரர் விரைவில் நியமிக்கப்படுவார்’ என்றார். 

Next Story