மாவட்டத்தில் மே தின விழா கொண்டாட்டம்


மாவட்டத்தில் மே தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 May 2018 11:45 PM GMT (Updated: 3 May 2018 11:40 PM GMT)

சேலம் மாவட்டத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

சேலம்

சங்ககிரி புதிய எடப்பாடி ரோடு பழைய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் பன்னீர்செல்வம் சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். விழாவில் துணை செயலாளர் புனிதவேல், செயற்குழு உறுப்பினர் ராஜா உள்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மே தினவிழாவையொட்டி சங்ககிரி மக்கள்மன்றம் சார்பில் சங்ககிரி துப்புரவு தொழிலாளர் களுக்கு பாராட்டு விழா நடத்தினர். விழாவில் உதவி கலெக்டர் ராமதுரைமுருகன் தலைமை தாங்கி துப்புரவு தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். விழாவில் மக்கள் மன்ற செயலாளர் குழந்தைவேல் வரவேற்று பேசினார்.

எடப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழாவும், பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. மே தின கொடியை மாநில தலைவர் ஏகநாதன் ஏற்றி வைத்தார். பின்னர் பூலாம்பட்டி ரோட்டில் உள்ள விசைத்தறி சிறுதொழில் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு மண்டல செயலாளர் வில்லியம் தலைமை தாங்கினார். எடப்பாடி கோட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் ஜெகதீஸ், பொருளாளர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வது என்றும், சாலை ஆய்வாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்குவது என்றும், தமிழக அரசு தொழில் நுட்ப கூட்டணியில் சேர்ந்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எடப்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது. கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற விழாவிற்கு கட்சி நிர்வாகி வீராசாமி தலைமை தாங்கினார். ஸ்டாலின், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேவூர் துணை மின் நிலையம் அருகில் மின்சார ஊழியர்கள் சங்கம் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற மின் ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குருநாதன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். கிளை செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க தலைவர் தங்கவேலன் முன்னிலை வகித்தார். வட்ட கிளை தலைவர் மணி, கிளை தலைவர் குப்புசாமி ஆகியோர் பேசினார்கள். அதைத்தொடர்ந்து அனைத்து ஊழியர் சங்க தொழிலாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டன.

Next Story