திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் முயற்சி


திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் முயற்சி
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 7:42 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் ரெயில் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டிருப்பதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போலீஸ் உதவி கமிஷனர்கள் பாலமுருகன்(சட்டம்- ஒழுங்கு) தலைமையில் உதவி கமிஷனர் அருள்அமரன் (மாநகர குற்றப்பிரிவு), கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ரெயில் நிலைய நுழைவுவாயில் முன்பு போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்திருந்தனர். மேலும் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக நுழைவுவாயிலிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜங்ஷன் ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது நுழைவுவாயில் முன்பு போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷம் எழுப்பினர். அப்போது சிலர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கட்சியின் செயற்குழு உறுப்பினர் லெனின் சட்டை கிழிந்தது. போலீசாருடன் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தண்ணீர் பிரச்சினைக்காக போராட்டம் நடத்த கூட அனுமதிக்க மாட்டீர்களா? என போலீசாரை பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து ரெயில் நிலைய நுழைவுவாயில் வளாகப்பகுதி வரை சென்று போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கினர். அதன்பின் நுழைவுவாயில் வளாகப்பகுதியில் தரையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 8 பெண்கள் உள்பட 26 பேர் கைதாகினர். கைதானவர்கள் அருகில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டத்தால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

Next Story