4 நாடுகளில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2¼ கிலோ தங்கம் பறிமுதல்


4 நாடுகளில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2¼ கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 5 May 2018 3:45 AM IST (Updated: 5 May 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2¼ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் உள்நாட்டு விமானமாக செல்ல இருந்தது. இந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு இருக்கையில் பைப் ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ.25 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். எந்த பயணி தங்கத்தை கடத்தி வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுபோல், மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் மதுரையை சேர்ந்த கோமதி (வயது 44), வைரம்மாள் (60) ஆகியோரிடம் சோதனை செய்தபோது இருவரிடமும் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.

மேலும் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த சுசீலா சாந்தி (46) என்பவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 110 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து வந்த விமானத்தில் கேரளாவை சேர்ந்த சைமுரூல் ஹக் (32) என்பவரிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 133 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதன்மூலம், 3 பெண்கள் உள்பட 4 பேரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 2 கிலோ 243 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு சென்ற விமானத்தில் ஏற வந்த சென்னையை சேர்ந்த நைனா முகமது (50) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது ரூ.2½ லட்சம் மதிப்புள்ள ஜப்பான் நாட்டு ‘யென்’ கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Next Story