திருப்பூர் அருகே போலி டாக்டர் கைது


திருப்பூர் அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

திருப்பூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். பிளஸ்-2 வரை படித்து விட்டு சிகிச்சை அளித்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 32). பிளஸ்-2 வரை மட்டுமே படித்து உள்ள இவர், அதே பகுதியில் சிவன்மலை என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருவதோடு அந்த பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்ததாக இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை நிர்வாகிகளுக்கு தகவல் தெரியவந்தது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சுந்தர்ராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை இணை இயக்குனர் டாக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் மருத்துவ துறை அதிகாரிகள் திடீரென கணியாம்பூண்டியில் ஆனந்த் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.

பின்னர் அவருடைய சான்றிதழ்களை சரிபார்த்த போது அவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்கவில்லை என்றும், பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துவந்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து இணை இயக்குனர் டாக்டர் சுந்தர்ராஜன் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ஆனந்தை கைது செய்தனர். திருப்பூர் அருகே போலி டாக்டர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story