மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் + "||" + Seized banned tobacco products

பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து விற்பனை செய்தால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள ஒரு சில மளிகை கடைகள், பெட்டி கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில் பொள்ளாச்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சுப்புராஜ், செல்வபாண்டியன், காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் புதிய, பழைய பஸ் நிலையங்கள், மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, பாலக்காடு ரோடு உள்பட நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது கடைகளில் தடையை மீறி மறைத்து வைத்து விற்பனை செய்யப் பட்ட புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று அழிக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகரில் உள்ள முக்கிய சாலைகள், பஸ் நிலையங்களில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்பட 42 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இதுதொடர்பாக 12 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நோட்டீசை மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது, இருப்பு வைப்பது, தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் பதிவு உரிமம் பெறாத 4 கடைகளுக்கு உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.