கட்டி திறக்கப்படாத புதிய மேம்பாலம் இரவு நேர மதுபான “பார்” ஆக செயல்படும் அவலம்


கட்டி திறக்கப்படாத புதிய மேம்பாலம் இரவு நேர மதுபான “பார்” ஆக செயல்படும் அவலம்
x
தினத்தந்தி 4 May 2018 11:15 PM GMT (Updated: 4 May 2018 9:05 PM GMT)

சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் கட்டி திறக்கப்படாத புதிய மேம்பாலம் இரவு நேர மதுபான பார் ஆக செயல்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் இரவு நேரங்களில் மதுபான “பார்” ஆக செயல்படுகிறது. இங்கு வரும் குடிமகன்கள் பாட்டில்களை உடைத்து போடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ரூ.52 கோடி செலவில் 870 மீட்டர் நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் வண்டிக்காரத்தெரு பகுதியில் இருந்து மேரீஸ்கார்னர் வரை கட்டப்பட்டுள்ளது. 12 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் இருபுறமும் தலா 7 மீட்டர் அகலத்தில் அணுகுசாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் தற்போது கட்டப்பட்டுள்ள படி இருந்தால் விபத்துகள் ஏற்படும். எனவே பாலத்தை ஏற்கனவே பழைய திட்ட வரைபடத்தின்படி ராமநாதன்ரவுண்டானா வரை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் இந்த பாலம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் பாலத்தில் தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாலத்தின் மேல்பகுதியில் இரவு நேரங்களில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்தி வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் மதுபான பார் ஆக செயல்படுகிறது.

அவ்வாறு மது குடிப்பதுடன் பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். சில நேரங்களில் மதுபான பாட்டில்களை உடைத்து போட்டு விடுகிறார்கள். இதனால் பாலத்தில் நடந்து செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் குடிமகன்கள் மதுகுடித்து விட்டு மேம்பாலத்தில் இருந்து பாட்டில்களை கீழே சாலையில் போடுகின்றனர். அவ்வாறு போடும் போது கீழே செல்பவர்கள் மீது விழுந்து காயம் ஏற்படும் நிலையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகிறார்கள்.

தற்போது பாலத்தில் மின்விளக்குகள் எதுவும் அமைக்கப்படாததால் குடிமகன்களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் மின் விளக்குகள் வசதி செய்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story