கருகி வரும் பயிர்களை காப்பாற்ற ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்


கருகி வரும் பயிர்களை காப்பாற்ற ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 9:15 PM GMT)

கம்மாபுரம் அருகே மின்மாற்றி பழுதடைந்ததால் கருகி வரும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

கம்மாபுரம்

கம்மாபுரம் அருகே உள்ள வி.குமாரமங்கலம் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களுக்கு கிராம எல்லையில் உள்ள 250 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றியின் மூலம் இணைப்பு பெற்று பாசன மின்மோட்டார்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் மின்மாற்றி பழுதானதால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து தடையின்றி மின்வினியோகம் செய்ய கோரி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்மாற்றியை அப்புறப்படுத்திவிட்டு, 100 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றியை பொருத்தி சென்றனர். இந்த மின்மாற்றி மூலம் அப்பகுதியில் உள்ள ஒருசில பாசன மின்மோட்டார்கள் மட்டும் இயங்கின. பெரும்பாலான மின் மோட்டார்கள் இயங்கவில்லை. இதனால் வி.குமாரமங்கலம் கிராமத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. விளை நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் மின்மாற்றி பழுதானதால், பாசன மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. மேலும் விளைநிலங்கள் வறண்டு வெடித்து காணப்படுகிறது. ஆகவே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தோம். அதன்அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்த மின்மாற்றியை அகற்றிவிட்டு, அதை விட குறைந்த செயல் திறன் கொண்ட மின்மாற்றியை பொருத்தி உள்ளனர். இந்த மின்மாற்றி மூலம் பாசன மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஒரு சில விவசாயிகள் வாடகைக்கு ஜெனரேட்டர் எடுத்து வந்து, அதன் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தற்போது பயிர்கள் நன்றாக வளர்ச்சி அடைந்து வரும் காலகட்டத்தில் பாசனம் செய்ய முடியாததாலும், மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப்போக்கினாலும் குறுவை சாகுபடி முழுவதும் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் 250 கிலோவாட் செயல் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Next Story