கடலூரில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம்


கடலூரில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 9:25 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

கடலூர்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று நிலையை மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி மாணவர் அணியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி அவர்கள் நேற்று காலை மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட தலைவர் சுரேந்தர், நகர செயலாளர் கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் சுற்றுலா மாளிகை முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி கையில் மண் சட்டியை ஏந்திபடி வந்து கடலூர் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு அமர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், வெளிமாநிலத்தில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத மாட்டார்கள் என்றும் கோஷமிட்டபடி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன், மாநில மகளிரணி துணை செயலாளர் அமராவதி, ஒன்றிய செயலாளர் ரிச்சர்ட் தேவநாதன், நிர்வாகிகள் தண்டபாணி, சிலம்பு, மாரிக்கண்ணு, முத்துக்குமார், தங்கபாண்டியன், சுரேஷ், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றி அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story