ஈரோடு முத்தம்பாளையத்தில் ரூ.21 கோடி செலவில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு


ஈரோடு முத்தம்பாளையத்தில் ரூ.21 கோடி செலவில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு
x
தினத்தந்தி 5 May 2018 3:30 AM IST (Updated: 5 May 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு முத்தம்பாளையத்தில் ரூ.21¼ கோடி செலவில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெரும்பள்ளம் ஓடையில் குளத்துப்பண்ணை ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த 79 குடும்பத்தினருக்கும், அசோகபுரி ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த 177 குடும்பத்தினருக்கும் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரூ.21 கோடியே 27 லட்சம் செலவில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஈரோடு முத்தம்பாளையம் பாரதிநகர் பகுதியில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

ஈரோட்டில் நடந்த திறப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கலந்துகொண்டு வீடுகள் பெற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும், புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு உள்ளே சென்று அவர் பார்வையிட்டார். இந்த விழாவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர் தமிழரசு, ஈரோடு தாசில்தார் அமுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “ஒவ்வொரு வீடும் 397 சதுர அடியில் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் தார் சாலை, மழைநீர் வடிகால், சாக்கடை வசதி, தண்ணீர் சேமிப்பு தொட்டி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது” என்றனர். 

Next Story