‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக பிரதமர் மீது வழக்கு தொடருவோம்’ - அய்யாக்கண்ணு


‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக பிரதமர் மீது வழக்கு தொடருவோம்’ - அய்யாக்கண்ணு
x
தினத்தந்தி 4 May 2018 11:08 PM GMT (Updated: 4 May 2018 11:08 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதித்ததாக பிரதமர் மோடி மீது வழக்கு தொடருவோம் என்று சேலத்தில் அய்யாக்கண்ணு கூறினார்.

சேலம்,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய கோரி கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று சேலத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள், பொதுமக்களிடம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கியதுடன் அதுதொடர்பாக அவர்களிடம் விளக்கி கூறினர். இதையடுத்து அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஆண்களுக்கு மலட்டு தன்மையும், பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினையும் அதிகளவு ஏற்படுகிறது. எனவே இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழக விவசாயிகளின் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாகவும் ஜூன் மாதம் 9-ந் தேதி முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். அப்போது விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம். நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டால் ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதித்ததாகவும், கடமையை செய்ய மறுத்ததாகவும் பிரதமர் மோடி மீது விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு தலைசிறந்த மூத்த வக்கீல்களை கொண்டு வாதாட வேண்டும். தமிழகத்தில் பல ஆறுகளில் தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது. இதை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக மாற்ற செயல் திட்டத்தை தீட்ட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story