சுவிட்சர்லாந்தில் ஓடப்போகும் மரத்தாலான டிராம்!
சுவிட்சர்லாந்து நாட்டில், முழுவதும் மரத்தாலான டிராம் வண்டிகள் ஓடப் போகின்றன என தகவல் வெளியாகியிருக்கிறது.
அடுத்த ஆண்டு இறுதியில், ஜூரிச் நகரச் சாலைகளில் ஓடக்கூடிய மரத்தாலான புதிய டிராம் மாடலை அந்நகர போக்குவரத்துத் துறை தயாரித்திருக்கிறது.
கனடா நாட்டு நிறுவனமான பம்பார்டியர் வடிவமைத்துள்ள டிராமின் மாதிரியை ஜூரிச் போக்குவரத்துத் துறையின் தொழிற்சாலை ஒன்றைச் சேர்ந்த வல்லுநர்கள் பல மாதங்கள் செலவிட்டுத் தயாரித்துள்ளனர்.
குறிப்பிட்ட மாடல் டிராமை உருவாக்கும் போக்குவரத்துத் துறையின் தலைவரான கிடோ சோச், இந்த நேரத்தில் இதுதான் தங்களது மிக முக்கியமான பணி என்றார்.
மொத்தம் 91 பேர் அமரும் வசதியும், 187 பேர் நிற்பதற்கான இடமும் கொண்ட இந்த டிராம், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள டிராம் வண்டியைவிட 20 சதவீதம் அதிக இடவசதி கொண்டது ஆகும்.
இதில், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் தள்ளுவண்டியுடன் பயணிக்கும் பெற்றோருக்காக இரண்டு பெரிய பிரிவுகளும் உள்ளன.
முழுவதும் மரத்தாலான இருக்கைகள் கொண்ட இந்த டிராமில், கைப்பிடிகள் உருக்கில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோட்டுகளை மாட்டுவதற்கான கொக்கிகளும், மொபைல் சாதனங்களுக்கான யு.எஸ்.பி. போர்ட்களும் உள்ளன.
வருகிற 2020-ம் ஆண்டு கோடைகாலத்தில் இந்த டிராம் வண்டிகள் முழுமையாக பொதுப் பயன்பாட்டுக்கு வருமாம்.
இதுபோன்ற 70 டிராம் வண்டிகளைத் தயாரிக்க 358 மில்லியன் சுவிஸ் பிராங் மதிப்புக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Related Tags :
Next Story